ரஷ்ய எண்ணெய் வாங்கும் விவகாரம்; இந்தியாவின் மறுப்பை அதிபர் டிரம்ப் மதிக்கவில்லை: காங். விமர்சனம்
புதுடெல்லி: ‘ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் இந்திய வெளியுறவு துறையின் மறுப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் மதிக்கவே இல்லை’ என காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. ரஷ்யாவிடம் அதிகளவு கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அபாரதமாக இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ளார். இதன் பிறகு, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் மோடி தன்னிடம் வாக்குறுதி அளித்ததாக டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார். இத்தகவலை இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்தது. ஆனாலும் டிரம்ப் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை.
நேற்று முன்தினம் ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், ‘‘இந்தியா இப்படிப்பட்ட பதிலை தந்திருப்பதாக நான் நம்பவில்லை. ஏனென்றால், நான் பிரதமர் மோடியுடன் பேசினேன். அவர் ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக வாக்குறுதி அளித்துள்ளார். ஒருவேளை இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை தொடர்ந்தால், மிக அதிகமான வரியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’’ என மிரட்டினார்.
இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று தனது எக்ஸ் பதிவில், ‘‘ரஷ்யா கச்சா எண்ணெய் விவகாரம் குறித்து கடந்த 5 நாட்களில் 3 முறை டிரம்ப் பேசி உள்ளார். இந்த வார இறுதியில் புடாபெஸ்டில் அவர் ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க உள்ளார். எனவே இந்த விஷயத்தை மேலும் பலமுறை டிரம்ப் பேசுவார் என்பதில் சந்தேகமில்லை. இந்த விஷயத்தில் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் மறுப்பை டிரம்ப் மதிக்கவே இல்லை. அவற்றை ஒதுக்கி தள்ளிவிட்டார்’’ என கூறி உள்ளார்.
இதுமட்டுமன்றி, பாக்ஸ் டிவி சேனலுக்கு டிரம்ப் அளித்த பேட்டியில், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போரை அவர் தான் நிறுத்தியதாகவும், இப்போரில் 7 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறியிருக்கிறார். இந்த தகவலையும் இந்திய அரசு பலமுறை மறுத்தும் டிரம்ப் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை.