ஜனாதிபதி திரௌபதி முர்மு முன்னிலையில் இந்தியா - அங்கோலா இடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!
அங்கோலா: அங்கோலா சென்றுள்ள ஜனாதிபதி திரௌபதி முர்மு முன்னிலையில், மீன்வளம், கடல் வளங்கள், தூதரக விவகாரங்களில் இருநாடுகளும் ஒத்துழைப்பு அளிப்பது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்திய ஜனாதிபதி ஒருவர் ஆப்ரிக்க நாடான அங்கோலாவுக்கு சென்றது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி திரௌபதி முர்மு, ஜனாதிபதி ஜோவோ மானுவல் கோன்சால்வ்ஸ் லூரென்கோவுடன் பரந்த அளவிலான இருதரப்பு விவாதங்களை நடத்தினார். எரிசக்தி கூட்டாண்மை, உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, சுகாதாரம், விவசாயம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட ஒத்துழைப்பை ஆழப்படுத்த தொடர்ந்து இணைந்து பணியாற்ற இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
அங்கோலாவின் வளர்ச்சிப் பயணத்தில், இருதரப்பு ரீதியாகவும், இந்தியா-ஆப்பிரிக்கா மன்ற உச்சிமாநாட்டின் பரந்த கட்டமைப்பிலும் நம்பகமான பங்காளியாக இருப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்தினார்.
இந்தியத் தரப்பில் ஜல் சக்தி மற்றும் ரயில்வே துறை இணையமைச்சர் ஸ்ரீ வி. சோமன்னா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீ பர்புபாய் நாகர்பாய் வாசவா மற்றும் டி. கே. அருணா மற்றும் மூத்த அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர். மீன்வளம், மீன்வளர்ப்பு மற்றும் கடல் வளங்களில் ஒத்துழைப்பு; மற்றும் தூதரக விவகாரங்கள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இந்த நிகழ்வில் பரிமாறப்பட்டன.