அதிக வரி விதிக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை என்ற பெடரல் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டிரம்ப் மேல்முறையீடு: இந்தியா மீதான வரி விதிப்பு நியாயமானது என வாதம்
பாஸ்டன்: வெளிநாட்டு இறக்குமதி பொருட்கள் மீது வரிகளை விதிக்கும் தனது அதிகாரத்தை கட்டுப்படுத்தும் பெடரல் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அதிபர் டொனால்ட் டிரம்ப் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இன்றி பல்வேறு நாடுகளுக்கும் எதிராக அதிக வரிகளை விதித்து உத்தரவிட்டுள்ளார். இந்தியா மீது மொத்தமாக 50 சதவீத வரியை விதித்துள்ளார். அதிபரின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு எதிராக கடந்த மே மாதம் வர்த்தக நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பித்து இருந்தது. இந்நிலையில் அமெரிக்க பெடரல் மேல்முறையீட்டு நீதிமன்றமும் இந்த தீர்ப்பை உறுதி செய்தது. அதிபர் டிரம்பின் பெரும்பாலான வரி விதிப்பு சட்டவிரோதமானது என்றும், கூடுதல் வரி விதிப்பை நீக்க வேண்டும் என்றும் பெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. வரிகள் தொடர்பாக முடிவு எடுக்க அதிபருக்கு அதிகாரமில்லை. நாடாளுமன்றத்துக்குதான் அதிகாரம் உண்டு என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் பெடரல் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யும்படி டிரம்ப் அரசு அந்நாட்டின் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. கூட்டாட்சி சட்டத்தின் கீழ் அதிபருக்கு அதிக இறக்குமதி வரிகளை விதிப்பதற்கு அதிகாரம் உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்தியாவின் மீது விதிக்கப்பட்ட கடுமையான வரிகளை அதிபர் தரப்பு நியாயப்படுத்தி உள்ளது. நடந்து வரும் ரஷ்யா- உக்ரைன் போரை நிறுத்துவதற்கான முயற்சிக்கு இது முக்கிய அம்சமாகும். நீதிமன்றத்தின் உத்தரவானது கடந்த 5 மாதங்களாக அதிபர் வரிகள் மூலமாக மேற்கொண்டு வரும் வெளிநாட்டு பேச்சுவார்த்தைகளில் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்துகிறது.
ஏற்கனவே நடத்தப்பட்ட கட்டமைப்பு ஒப்பந்தங்கள் மற்றும் நடந்து கொண்டிருக்கும் பேச்சுவார்த்தைகள் இரண்டையும் பாதிக்கிறது. ஐரோப்பிய யூனியன், ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகளோடு நாங்கள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம். அவர்கள் எங்களுக்கு கிட்டத்தட்ட லட்சம் கோடிகளை செலுத்துகிறார்கள். அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இந்த வழக்கில் நாங்கள் வெற்றிபெறவில்லை என்றால் நமது நாடு மிகவும் அதிகமாக பாதிக்கப்படப் போகிறது” என்றும் மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நவம்பர் மாதத்துக்கு முன்னதாக வழக்கை விசாரணைக்கு எடுத்து வாதங்களை கேட்க வேண்டும் என்று நீதிபதிகளிடம் சொலிசிட்டர் ஜெனரல் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கிடையே, வரி விதிப்பை உச்ச நீதிமன்றமும் ரத்து செய்தால், அமெரிக்கா ஏழை நாடாக மாறிவிடும் என்று டிரம்ப் நிருபர்களிடம் தெரிவித்தார்.
ஹார்டுவர்டுக்கு எதிரான அதிபர் உத்தரவு ரத்து
அமெரிக்காவின் பிரபல ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது மற்றும் பல்கலைக்கழகத்தில் பயிலும் அனைத்து வெளிநாட்டு மாணவர்களின் சட்டவிரோத செயல்பாடுகள், வன்முறை செயல்கள் குறித்த விவரங்களை தெரியப்படுத்த வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியது. தவறினால் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்டு வந்த வெளிநாட்டு மாணவர் சேர்க்கை அனுமதி ரத்து செய்யப்படுவதோடு, ஆராய்ச்சி நிதியும் நிறுத்தப்படும் என்றும் அரசு எச்சரித்தது. அதிபர் டிரம்ப் அரசின் நிபந்தனைகளை ஏற்பதற்கு பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இதன் எதிரொலியாக ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு அரசு வழங்கி வந்த ஆராய்ச்சி நிதி நிறுத்தப்படுவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்தது. அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ஹார்வர்டு பல்கலைக்கழகம் சார்பில் பாஸ்டன் பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி அலிசன் பரோஸ், நிர்வாகம் மற்றும் மாணவர் சேர்க்கை கொள்கைகளில் மாற்றங்களை செய்ய வேண்டும் என்று அதிபர் டிரம்ப் நிர்வாகம் வலியுறுத்தியது சட்டவிரோதமானது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கான ஆராய்ச்சி நிதியில் 2.6பில்லியன் குறைக்கும் அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் முடிவை திரும்ப பெற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.