ஜனாதிபதி முர்மு அறிவிப்பு கோவா, லடாக், அரியானாவுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்: தெலுங்கு தேசம் கட்சிக்கு வாய்ப்பு
இதன்படி, கோவா ஆளுநராக முன்னாள் ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சர் பூசபதி அசோக் கஜபதி ராஜூவும், லடாக்கின் புதிய லெப்டினன்ட் ஆளுநராக காஷ்மீர் முன்னாள் துணை முதல்வர் கவிந்தர் குப்தாவும், அரியானா ஆளுநராக மேற்கு வங்கத்தை சேர்ந்த மூத்த பாஜ தலைவர் ஆஷிம் குமார் கோஷும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பதவியேற்கும் தேதியிலிருந்து இந்த நியமனங்கள் நடைமுறைக்கு வரும் என அதில் கூறப்பட்டுள்ளது.
கவிந்தர் குப்தா, ஆஷிம் குமார் கோஷ் இருவரும் பாஜ கட்சியின் மூத்த தலைவர்கள். அசோக் கஜபதி ராஜூ தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் ஆவார். ஏற்கனவே தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ராம் மோகன் நாயுடு, சந்திரசேகர் பெம்மசானி ஆகியோர் ஒன்றிய அமைச்சர்களாக இருக்கும் நிலையில், அக்கட்சியின் மற்றொரு மூத்த தலைவருக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஒன்றிய பாஜ அரசின் கூட்டணி ஆட்சியில் தெலுங்கு தேசம் கட்சி முக்கிய பங்கு வகிக்கும் நிலையில் அக்கட்சிக்கு பாஜ அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.