பிரேமலதா தாயார் மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, பொருளாளர் எல்.கே.சுதீஷ், பாண்டிச்சேரி ராமச்சந்திரா மருத்துவமனை சேர்மன் ராதா ராமச்சந்திரன் ஆகியோரின் தாயாரும், எல்.சி.கண்ணையாவின் மனைவியுமான கே.அம்சவேணி (83) நேற்று காலை வயது மூப்பின் காரணமாக காலமானார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள சுதீஷ் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு பூத் முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்ற பிரேமலதா, சுதீஷ் தாயார் இறந்த தகவல் கிடைத்ததும் சென்னை திரும்பினர்.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்கு நேரில் சென்று பிரேமலதாவின் தாயார் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், எம்எல்ஏ பிரபாகர ராஜா ஆகியோர் உடனிருந்தனர். அம்சவேணியின் உடல் இன்று பகல் 1 மணியளவில் விருகம்பாக்கத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வடபழனி ஏவிஎம் மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
முதல்வர் இரங்கல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா தாயார் அம்சவேணி மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். அன்னையை இழந்து வாடும் பிரேமலதா, எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒன்றிய இணை அமைச்சர் முருகன்: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, பொருளாளர் எல்.கே.சுதீஷ் தாயார் அம்சவேணி மறைவுச்செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. தனது தாயாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன். இதேபோல் எடப்பாடி பழனிசாமி, செல்வப் பெருந்தகை, ஜி.கே.வாசன், உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.