பிரேமலதா முன்னிலையில் தேமுதிக நிர்வாகிகள் ரகளை
திருப்பூர்: தேமுதிக பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று திருப்பூர் வாலிபாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில், கட்சியின் பொதுச்செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் பொருளாளா் சுதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனா். காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக நிர்வாகிகள் காலையிலேயே மண்டபத்திற்கு வந்தனா். ஆனால் சுமார் 2.30 மணி நேரம் தாமதமாக 12.30 மணிக்கு கூட்ட அரங்கிற்கு பிரேமலதா விஜயகாந்த் வந்தார். இதனால் தொண்டர்கள் அதிருப்தியடைந்தனர். அதே நேரத்தில் கூட்ட அரங்கிற்குள் வராமல் நிர்வாகிகள் சிலர் வெளியே நின்றபடி கோஷமிட்டனா. திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் குழந்தைவேல் தங்களுக்கு முறையான அழைப்பு விடுக்கவில்லை. தங்களை மதிப்பது இல்லை. தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி வெளியே நின்று கோஷமிட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கூட்டம் முடிந்த பின்னர் பிரேமலதா அந்த நிர்வாகிகளை சந்தித்தார்.