அமெரிக்காவில் சாலையில் ஏற்பட்ட தகராறில் 17 வயது கர்ப்பிணி சுட்டுக் கொலை: அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சிசு
லூசியானா: சாலையில் ஏற்பட்ட வாக்குவாதம் துப்பாக்கிச் சூட்டில் முடிந்ததால், தாயின் உயிரைப் பறித்து, பிறந்த சிசுவை அனாதையாக்கிய கொடூர சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தைச் சேர்ந்த கெட்லின் ஸ்ட்ரேட் (17) என்ற கர்ப்பிணிப் பெண், தனது காதலனுடன் காரில் சென்று கொண்டிருந்தார். நியூ ஆர்லியன்ஸ் அருகே சென்றபோது, முன்னால் ெசன்ற பிக்கப் டிரக்கை முந்திச் செல்வதில் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருவரையொருவர் பின்தொடர்ந்து விரட்டுவதும், திடீரென பிரேக் பிடித்து அச்சுறுத்துவதுமாக நீடித்த இந்த மோதல், கொடூரமான துப்பாக்கிச் சூட்டில் முடிவடைந்தது.
பிக்கப் டிரக்கை ஓட்டி வந்த பேரி வெஸ்ட் (54) என்பவர், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் கெட்லினின் காரை நோக்கிச் சுட்டார். இதில், காரின் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த கெட்லினின் தலையில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார். ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய கெட்லின் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்து, பிரசவத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே பெண் குழந்தையை வெளியே எடுத்தனர். குழந்தை வெறும் 1.6 கிலோ எடையுடன் பிறந்தாலும், அதிர்ஷ்டவசமாக நலமுடன் உள்ளது.
குழந்தையின் உயிர் பிழைப்பதை உறுதி செய்வதற்காக, கெட்லின் உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் வைக்கப்பட்டிருந்தார். ஆனால், அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவும், குணமடைய வாய்ப்பில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து, நேற்று உயிர் காக்கும் கருவி அகற்றப்பட்டது. அவரது உயிரும் பிரிந்தது. பிக்கப் டிரக் டிரைவர் பேரி வெஸ்ட் கைது செய்யப்பட்டார். கெட்லினின் காரில் இருந்து தன்னை நோக்கி முதலில் சுட்டதாக டிரைவர் பேரி வெஸ்ட் கூறினார். ஆனால், கெட்லினின் காரில் எந்த ஆயுதங்களும் இல்லை என்பதை உறுதி செய்த போலீசார், அவரது கூற்றை நிராகரித்துள்ளனர். தாயாகப் போவதை எண்ணி மிகுந்த மகிழ்ச்சியுடனும், அன்புடனும் இருந்த கெட்லினின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.