கசப்பில் முடிந்த காதல் திருமணம்; கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆர்டிஓ விசாரணை
போடி: போடியில் காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், போடி சுப்புராஜ் நகரை சேர்ந்தவர் சக்திவேல் மனைவி ராஜேஸ்வரி (45). இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். சக்திவேல் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இவர்களது 2வது மகள் ரேணுகாதேவி (26). இவர் உறவினரான கூலித்தொழிலாளி ஆயுத்ராஜ் என்பவரை காதலித்தார். ஆனால் இதற்கு தாய் ராஜேஸ்வரி எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில், எதிர்ப்பை மீறி கடந்த மார்ச் 19ம் தேதி போடி அருகே தீர்த்ததொட்டி முருகன் கோயிலில் ரேணுகாதேவி, ஆயுத்ராஜ் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். பின்னர், மதுரையில் வசித்து வந்தனர். இந்நிலையில், ரேணுகாதேவி கர்ப்பம் அடைந்தார்.
இதையடுத்து தம்பதியர் மதுரை வீட்டை காலி செய்துவிட்டு, கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு போடி அருகே ரெங்கநாதபுரத்தில் குடியேறினர். இருவரும் போடி அரசு போக்குவரத்து பணிமனை அருகே இட்லி கடை வைத்து நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது கர்ப்பிணி ரேணுகாதேவி தனது வீட்டில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அவரது தாய் ராஜேஸ்வரி போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து எஸ்.ஐ.க்கள் விஜய், மலைச்சாமி ஆகியோர் கர்ப்பிணி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், காதல் தம்பதி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததும், இதனால் மனமுடைந்து ரேணுகாதேவி தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்துள்ளது. திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் பெரியகுளம் ஆர்டிஓ ரஜத் பீடன் விசாரணை நடத்தி வருகிறார். காதல் திருமணம் செய்துகொண்ட கர்ப்பிணிப் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் போடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.