கர்ப்பமான காதலியை சாதி பிரச்னையால் ஏற்க மறுப்பு கைதான காதலனுக்கு இடைக்கால ஜாமீன்: திருமணம் செய்வதாக உறுதி கூறியதால் உச்சநீதிமன்றம் உத்தரவு
சென்னை: கர்ப்பமான காதலியை சாதி பிரச்னையை காட்டி ஏற்க மறுத்ததால் கைதான காதலன், வீடியோ கான்பரன்சில் ஆஜராகி திருமணம் செய்வதாக உறுதியளித்ததால் இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் எஸ்.நவீன். இவர் அதேபகுதியை சார்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதில் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்கள். குறிப்பாக சம்பந்தப்பட்ட பெண் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர். இருவருக்கும் இடையில் திருமண பந்தத்தை மீறிய உறவால் அந்த பெண் மூன்று மாத கர்ப்பமாகி உள்ளார்.
இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி காதலனை பலமுறை வற்புறுத்தியுள்ளார். ஆனால் சாதி வேறுபாட்டை காரணம் காட்டி மறுத்து வந்தது மட்டுமில்லாமல், அந்த பெண் மீது நவீன் குடும்பத்தினர் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் நவீன் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து வழக்கில் இருந்து தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி நவீன் தாக்கல் செய்திருந்த மனுவை கீழமை நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் நிராகரித்து தள்ளுபடி செய்தன.
இதையடுத்து மேற்கண்ட விவகாரம் தொடர்பாக நவீன் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் பி.வி.நாகரத்னா மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.இதையடுத்து வழக்கு தொடர்பாக நவீன் மற்றும் அவருடைய பெற்றோர் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நேற்று ஆஜராகினர். அப்போது நீதிபதிகள் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய சம்மதமா என்று நவீனிடம் கேள்வி எழுப்பிய போது திருமணம் செய்ய தயாராக இருப்பதாகவும், நல்ல முறையில் பார்த்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி நாகரத்னா,‘‘ஜாமீன் கிடைப்பதற்காக மட்டும் திருமணம் செய்வதாக இருந்தால் அது சரியான போக்கு கிடையாது. ஜாமீன் கிடைக்கும் பட்சத்தில் நீங்கள் வெளியில் வந்தவுடன் காரணங்களை கூறி நிராகரித்தால் கடும் விளைவை சந்திக்க நேரிடும்’’ என்றார். அப்போது நவீனின் பெற்றோர் சம்மந்தப்பட்ட பெண்ணை நவீனுக்கு உடனடியாக திருமணம் செய்து வைப்பதாக உறுதியளித்தனர். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நவீனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கினர். மேலும் இந்த விவகாரத்தில் நிபந்தனைகளை விசாரணை நீதிமன்றம் விதிக்க வேண்டும். குறிப்பாக அழைப்பிதழ் அச்சிட்டு முறைப்படி திருமணம் நடத்தப்பட வேண்டும். ஒருவேளை வாக்குறுதிகள் மீறப்படும் பட்சத்தில் உடனடியாக இடைக்கால ஜாமீன் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்தது மட்டுமில்லாமல், ‘இருவரும் நல்லா இருங்கள்’ என்று தமிழில் வாழ்த்தினர்.