இந்தியா குறித்த அவர்களின் கணிப்பு பொய்த்தது; இங்கிலாந்து பிரிவினை கட்டத்தில் இருக்கு!: ஆர்எஸ்எஸ் தலைவர் பரபரப்பு பேச்சு
இந்தூர்: சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா ஒற்றுமையாக நீடிக்காது என கணித்த வின்ஸ்டன் சர்ச்சில் போன்றவர்களின் கூற்றுகளை பொய்யாக்கி, இந்தியா வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருவதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், ‘சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா என்ற நாடு ஒன்றுபட்ட நாடாக நீடிக்காது என்றும், மாறாக குழப்பம் மற்றும் பிரிவினையில் மூழ்கிவிடும் என்றும் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் கணித்திருந்தார். ஆனால் அவரது கணிப்பை பொய்யாக்கி, இந்தியா இன்றுவரை ஒன்றுபட்டு இருப்பது மட்டுமல்லாமல், தற்போது இங்கிலாந்துதான் ‘பிரிவினையின் கட்டத்திற்கு’ (நேற்று முன்தினம் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக லண்டனில் மாபெரும் போராட்டம் நடந்தது) வந்து கொண்டிருக்கிறது.
அனைத்து தவறான கணிப்புகளையும் தகர்த்தெறிந்து, இந்தியா நிலையான வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகிறது. பாரம்பரிய தத்துவமான அறிவு, செயல் மற்றும் பக்தி ஆகியவற்றின் சமநிலைப்படுத்தப்பட்ட கடவுள்களின் மீதான நம்பிக்கையே இந்தியாவின் வெற்றிக்கு காரணம். இந்தியா 3,000 ஆண்டுகளாக உலகத் தலைவராக இருந்தபோது, உலகளவில் எந்தவிதமான போராட்டங்களும் ஏற்படவில்லை. மற்ற நாடுகளைக் கைப்பற்றாமலோ அல்லது வர்த்தகத்தை அடக்காமலோ இந்தியா இந்த தலைமைத்துவத்தை அமைதியான முறையில் அடைந்தது. ஆனால், தற்காலத்தில் தனிப்பட்ட சுயநலன்களே மோதல்களுக்கு காரணமாக இருக்கின்றன. மனிதநேயத்தின் மேம்பாட்டிற்கு இந்த சுயநல நோக்கங்களில் இருந்து மாற்றம் ஏற்படுவது அவசியம்’ என்று கூறினார்.