மாணவர்களின் பாதுகாப்பிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்!!
சென்னை: பருவமழையை முன்னிட்டு அனைத்து வகை பள்ளிகளின் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பணி பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மாணவர்கள் பள்ளிக்கு மிதிவண்டிகளில் வரும் போது சகதிகளில் வழுக்கி விழக்கூடிய அபாயத்தை எடுத்து கூறி பாதுகாப்பாக வர அறிவுரை கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மழை கோட்டு, குடை கொண்டு வர வேண்டும், குடைகளை கொண்டு மாணவர்கள் தங்களுக்குள் விளையாட கூடாது என்றும் அறிவுறுத்தல் வழங்கவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக ஈரமாக உள்ள சுற்றுச்சுவர் அருகில் மாணவர்கள் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் உள்ள நீர்த்தேக்கத் பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டிகள் மற்றும் நீர்தேக்கத் தொட்டிகள் இருக்கும் பட்சத்தில் அவை பாதுகாப்பான முறையில் மூடப்பட்டு உள்ளதா என உறுதி செய்ய வேண்டும். மாணவர்கள் அவற்றின் அருகில் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கூரையில் நீர் தேங்கா வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மாணவர்கள் விடுமுறை நாட்களில் ஏரி, குளம் மற்றும் ஆறுகளுக்கு அருகில் செல்வதையும் ஆற்றில் குளிப்பதையும் தவிர்த்திட அறிவுரைகள் வழங்கிட வேண்டும்.
மழைக்காலங்களில் ஏரிகளில் உடைப்புகள் ஏற்படவும், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படவும் வாய்ப்புள்ளதால் அவற்றின் அருகில் வேடிக்கை பார்க்க செல்ல கூடாது என மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்களுக்கும் இது குறித்து தலைமை ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அறுந்து கிடக்கும் ,மின்கம்பிகளை மாணவர்கள் தொடக்கூடாது என அறிவுறுத்த வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. வகுப்பறைககளில் உள்ள சுவிட்சுகள் சரியாக உள்ளனவா, மழைநீர் படாதவண்ணம் உள்ளனவா என தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.