முதிர்ந்த சினை வரி இறால்கள்
சினை வரி இறால்களை தொட்டிகளில் அடைத்து பராமரிக்கும் முறை குறித்து கன்னியாகுமரி மாவட்டம் கணபதிபுரம் வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையத்தின் தலைவர் முனைவர் விஜய் அமிர்தராஜ் பகிர்ந்த தகவல்களை கடந்த இதழில் கண்டோம். அதன் தொடர்ச்சியை இந்த இதழில் காண்போம்.ஒரு சதுர மீட்டருக்கு 68 என்ற எண்ணிக்கையில் சின்ன இறால்கள் இனப் பெருக்கத்திற்காகவும், இனச்சேர்க்கைக்காகவும் விடப்படுகின்றது. செயற்கை முறை கருத்தரிப்பிற்காக சதுர மீட்டருக்கு 16 என்ற அளவில் சினை இறால்கள் விடப்படுகின்றன. இதில் ஆண் பெண் விகிதாச்சாரம் 1:1 என்ற வகையில் இருத்தல் வேண்டும். வெப்பநிலை 25-27°C ஆக இருத்தல் ஏதுவானதாகும். இச்சூழலில் 30, 35 கிராம் உடல் எடையுள்ள பெண் சினை இறால்கள் 1,00,000 1,50,000 முட்டைகள் இடுகின்றன. மேலும் 40, 45 கிராம் உடல் எடையுள்ள பெண் சினை இறால்கள் 1,50,000 2,00,000 வரை முட்டைகள் இடுகின்றன. இடப்பட்ட முட்டைகள் தனியாக சேகரிக்கப்பட்டு (300-500 மி.மீ கண்ணி அளவுள்ள வலை கொண்டு) தனிமைப்படுத்தப்படுகின்றது. இதில் சேதம் ஏதேனும் ஏற்படாமல் இருக்க ஐயோடின் கிருமி நாசினி (50-100 பி.பி.எம்/10-60 நொடிகள்) உபயோகப்படுத்தப்படுகிறது. பொரிப்பகத்திற்கு மாற்றப்படும் முட்டைகளானது சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. பொதுவாக 50-75% பிழைப்புத்திறனுடன் முட்டைகள் பொரிக்கப்படுகின்றன. குஞ்சு பொரிக்கப்படும் தொட்டிகளில் பொரிப்பதற்கு ஏதுவாக 20 பி.பி.எம் கொண்ட ட்ரபுளாரின் (Triflurain) (32-35 பி.பி.டி உப்புத் தன்மை) அளிக்கப்படுகிறது. மேலும் நல்ல காற்றோட்டமும் வெளிச்சமும் அளிக்கப்படுகிறது. குஞ்சு பொரிக்கப்பட்டவுடன் இளம் உயிரிகள் தனியாக ஒரு தொட்டியில் சேகரிக்கப்படுகின்றது. பிறகு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றது.
சினை இறால்களுக்கு அளிக்கப் படும் ஊட்டச்சத்து:
*வைட்டமின்கள் (C மற்றும் E)
* தாது உப்புகள்
* நிறமேற்றக் காரணிகள் (இம்யுனோஸ்டிமுலன்ட்ஸ், அஸ்டாசாந்தின்கள் மற்றும் கரோட்டினாய்டுகள்)
* கொழுப்பு அமிலங்கள் (20:5n3 மற்றும் 22:6n3)
* உயிர் உணவு (பாலிகீட்ஸ், ஆர்டிமியா, கிரில், மற்றும் சிப்பி வகைகள்)
சினை இறால்கள் தூண்டுதல் முறை இனப்பெருக்கம்:
சினை இறால்கள் சாதாரணமாக முதிர்ச்சி அடைந்து இனப்பெருக்கத்திற்கு தயார்செய்தல் ஒரு வகையாக இருப்பினும் தூண்டுதல் முறையிலும் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. இவ்வகையில் சினை இறால்களின் “கண்ணுருளைகளை நீக்குதல்” தூண்டுதல் முறையில் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது. இம்முறைக்கு உட்படுத்தப்படும் இறால்களும் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.