‘பிராங்க்’ வீடியோவால் வந்த வினை சிறுமி மீதான போக்சோ வழக்கு ரத்து: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் தடை
மும்பை: சிறார் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்டம், சில சமயங்களில் வளரிளம் பருவத்தினரிடையே நிகழும் சம்பவங்களிலும் பயன்படுத்தப்படுவது குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, வயது வித்தியாசம் அதிகமாக இருக்கும் மற்றும் உண்மையான பாலியல் சுரண்டல் நோக்கம் கொண்ட வழக்குகளில், போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான விதிகளை மும்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
ஆனால், வளரிளம் பருவத்தினரிடையே சம்மதத்துடன் ஏற்படும் உறவுகள் அல்லது பாதிப்பில்லாத செயல்கள் தொடர்பான வழக்குகளில், சட்டத்தின் தவறான பயன்பாட்டைத் தடுக்கும் வகையில், நீதிமன்றங்கள் வழக்குகளின் தன்மையை ஆராய்ந்து தீர்ப்புகளை வழங்கி வருகின்றன. இந்த வரிசையில், சிறுவன் ஒருவனை சமூக ஊடகம் மூலம் துன்புறுத்தியதாக, 15 வயது சிறுமி மீது அவனது பெற்றோர் போக்சோ சட்டத்தின் கீழ் புகார் அளித்தனர். இந்த வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘இது துன்புறுத்தல் அல்ல; நண்பர்களை ஏமாற்றுவதற்காக அந்தச் சிறுவனும் சிறுமியும் சேர்ந்து சமூக ஊடகத்தில் செய்த பிராங்க் (விளையாட்டு)’ என்று விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, இரு தரப்பு பெற்றோரும் வழக்கை வாபஸ் பெற சம்மதம் தெரிவித்தனர்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், ‘சமூக ஊடகத்தில் நண்பர்களை ஏமாற்றுவதற்காக இரு சிறார்களும் சேர்ந்து செய்த விளையாட்டு இது. இதில் பாலியல் ரீதியான உள்நோக்கம் எதுவும் இல்லை; எனவே சிறுமிக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக் காவல்துறைக்குத் தடை விதிக்கப்படுகிறது. மேலும், இந்த வழக்கை மேற்கொண்டு நடத்துவது இரு சிறார்களின் எதிர்காலத்தையும் பாதிக்கும் என்பதால், இருதரப்பு பெற்றோரின் சம்மதத்தின் பேரில் சிறுமி மீதான போக்சோ வழக்கை ரத்து செய்கிறோம்’ என்று உத்தரவிட்டது.