ஃபிடே கிராண்ட் செஸ்; முதல் சுற்றில் இவானை வீழ்த்திய பிரக்ஞானந்தா: 14 வயது வீரரிடம் குகேஷ் டிரா
சமர்கண்ட்: உஸ்பெகிஸ்தானின் சமர்க்கண்ட் நகரில் நடந்து வரும் ஃபிடே கிராண்ட் செஸ் போட்டியில், பிரக்ஞானந்தா, வைஷாலி அபார வெற்றி பெற்றனர். உஸ்பெகிஸ்தானின் சமர்க்கண்ட் நகரில் ஃபிடே கிராண்ட் செஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இப்போட்டியின் முதல் நிலை வீரரான பிரக்ஞானந்தா, முதல் சுற்றில் ரஷ்யாவை சேர்ந்த இவான் ஸென்லியான்ஸ்கிக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி பெற்றார். மகளிர் பிரிவில், தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டரும் நடப்பு சாம்பியனுமான வைஷாலி, அபாரமாக செயல்பட்டு, ஹாலந்து வீராங்கனை எலினே ரோபெர்சை வீழ்த்தினார். அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றதால், அவருக்கு 2 புள்ளிகள் கிடைத்தன.
அவரும், ஆஸ்திரியா வீராங்கனை ஒல்கா பெடெல்காவும் 2 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர். தமிழகத்தை சேர்ந்த மற்றொரு கிராண்ட் மாஸ்டரும் உலக சாம்பியனுமான குகேஷ், 2வது சுற்றில், துருக்கியை சேர்ந்த 14 வயது இளம் வீரர் யாகிஸ் கான் எர்டோக்மஸ் உடன் மோதினார். அப்போட்டியில் வெல்ல வாய்ப்பிருந்தும், நேரக்குறைவு அழுத்தத்தால் எதிர்பாராத விதமாக, டிரா செய்ய நேரிட்டது. கிராண்ட் ஸ்விஸ் போட்டியில், ஓபன் மற்றும் மகளிர் பிரிவுகளில் முதல் இரு இடங்களை பெறுவோர், 2026ல் நடக்கும் ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் ஆட தகுதி பெறுவர்.