தென் தமிழக மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு :தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பதிவு
சென்னை : தென் தமிழக மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், " KTCC எனப்படும் சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் அடுத்தகட்ட மேகக்கூட்டங்கள் நகர்ந்து வருகின்றன. குறிப்பாக தலைநகர் சென்னையை சொல்லலாம். இதன் காரணமாக நகரின் சில பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்பிருக்கிறது. அதில் வட சென்னை மற்றும் மத்திய சென்னையில் இருக்கும் மக்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது.
அதேசமயம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் மழை இருக்காது. ஜாலியாக எஞ்சாய் பண்ணும் வகையில் தான் மழைப்பொழிவு இருக்கும். கூடிய விரைவில் சென்னைக்கு கனமழை உண்டு. அடுத்த சக்கரம் உருவாகும் போது பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைய வாய்ப்புள்ளது. அதாவது, அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 22ம் தேதி வாக்கில் உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு கனமழையை பொறுத்து பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடுவதற்கு வாய்ப்பிருப்பதை சுட்டி காட்டியிருக்கிறார்.
அடுத்த 24 மணி நேரத்தை கணக்கில் எடுத்து கொண்டால் வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை படிப்படியாக மேற்கு திசையை நோக்கி நகரும். இதனால் உள் மாவட்டங்களில் மழை பெய்யும். ஈரப்பதம் உட்புறமாக இழுக்கப்படும். தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் தமிழக மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இம் முறை மாஞ்சோலை மலைப் பகுதியை உற்றுநோக்கினால் செம மழை கொட்டி தீர்ப்பதற்கு வாய்ப்பிருப்பது தெரிய வரும்," என்று குறிப்பிட்டுள்ளார்.