துருக்கியில் பயங்கர நிலநடுக்கம்: கட்டிடங்கள் தரைமட்டம்
இஸ்தான்புல்: துருக்கியில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு பேரழிவுகளை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அந்நாட்டின் தென்மேற்குப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால், 53,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அண்மையில் அதே பகுதியில் ஜூலை மாதத் தொடக்கத்தில் ஏற்பட்ட 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்தார்; மேலும் 69 பேர் காயமடைந்தனர். இந்தச் சூழலில், துருக்கியின் மேற்குப் பகுதியில் உள்ள சிண்டிர்கி நகரை மையமாகக் கொண்டு, நேற்றிரவு 6.1 ரிக்டர் அளவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தத் தகவலை அந்த நாட்டின் பேரிடர் மேலாண்மை முகமை உறுதி செய்துள்ளது.
உள்ளூர் நேரப்படி இரவு 7.53 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள், இஸ்தான்புல் மற்றும் முக்கிய சுற்றுலா நகரமான இஸ்மிர் உட்பட நகரங்களில் உணரப்பட்டன. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பாலிசேகிர் மாகாணத்தில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்த காட்சிகளைத் துருக்கி ஊடகங்கள் ஒளிபரப்பின. சில நிமிடங்களிலேயே 4.6 ரிக்டர் அளவில் ஒரு நில அதிர்வும் பதிவானது. இதுகுறித்து உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா கூறுகையில், ‘மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஒருவர் பலியாகி உள்ளார்; காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்’ என்றார்.