அதிகார குவியல் அவசியமா?
உலகின் எந்தவொரு மூலையிலும் அதிகாரம் குவியத் தொடங்கினால் சர்வாதிகாரம் தானாகவே தலைதூக்கிவிடும். முடிவெடுக்கும் அதிகாரம் ஒருவர் கையில் குவியும்போது முறைகேடுகளும், அடக்குமுறைகளும் அவருக்கு கைவந்த கலையாகி விடுகிறது. இந்தியாவில் தற்போது 3வது முறையாக ஆட்சியில் இருக்கும் நரேந்திர மோடியும், அவர் தலைமையிலான ஒன்றிய அரசும் அதிகார குவியலை வைத்துக் கொண்டு, எதிர்கட்சிகளையும், தங்களுக்கு பிடிக்காத மாநில அரசுகளையும் வேரோடு பிடுங்கி எறிய முற்படுகின்றனர்.
மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய நிதி பங்கீடுகளை முறையாக தருவதில்லை. தமிழகத்தில் திராவிட மாடல் அரசு 4 ஆண்டுகளாக மக்களுக்கு தீட்டி வரும் நல்ல பல திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதில் ஒன்றிய அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இந்தி மொழி திணிப்பு, தமிழின் தொன்மையை அங்கீகரிக்க மறுப்பு என தமிழகத்தையும், திராவிட மாடல் ஆட்சியையும் இன்று வரை ஒன்றிய அரசு மாற்றந்தாய் மனப்பான்மையோடு அணுகி வருகிறது.
தனது ஊதுகுழலான அதிமுகவையும், அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதற்காக தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட கவர்னரையும் வைத்து கொண்டு, தினமும் அரசியல் நாடகங்களை அரங்கேற்றி வருகிறது. தமிழ்நாட்டில் வந்த நாள் முதல் அடங்காத காளையாய் சுற்றி திரிந்த கவர்னர் ஆர்.என்.ரவிக்கு, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட் படியேறி மூக்கணாங்கயிறு போட்டது. தமிழகத்தை முன்மாதிரியாக கொண்டே இன்று கேரளா, மேற்கு வங்கம், கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட 8 மாநிலங்களின் எதிர்கட்சி முதல்வர்களும் மாநில உரிமைகளுக்காக ஒன்றிய அரசின் காலரை பிடிக்க தொடங்கியுள்ளனர்.
அதிகார குவிப்புகளை எதிர்த்து திமுக இன்று, நேற்றல்ல, காலம் காலமாய் யுத்தம் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. 1967ல் அறிஞர் அண்ணா தொடங்கி, கலைஞரும் அதற்காக தனது முழக்கத்தை தொடர்ந்து எழுப்பினர். இதன் காரணமாகவே ஒன்றிய, மாநில உறவுகளை சீராய்வு செய்திட 1971ம் ஆண்டில் ராஜமன்னார் குழு அமைக்கப்பட்டது. இக்குழு அறிக்கை அடிப்படையில் தமிழக சட்டசபையில் மாநில சுயாட்சி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதை தொடர்ந்து 1983ம் ஆண்டில் ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட முன்னாள் நீதிபதி சர்க்காரியா தலைமையிலான குழு, அதிகார குவிப்பு குறித்து ஓரிடத்தில் விளாசியது. அதில் அளவுக்கு மீறிய அதிகாரங்களால் ஒன்றிய அரசுக்கு ரத்த கொதிப்பும், பல மாநில அரசுகளுக்கு ரத்த சோகையும் ஏற்பட்டுள்ளது என அன்றே மாநிலங்களின் அவலநிலையை படம் பிடித்து கூறியது.
அதன்பின்னர் 2007ம் ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி புஞ்சி தலைமையிலான குழுவும், கவர்னர் நியமனம் குறித்து நல்ல பல பரிந்துரைகளை வெளியிட்டது.
கவர்னர் என்பவர் கட்சி சார்பற்ற முறையில் இருக்க கேட்டுக் கொண்டது. மாநில முதல்வர்களின் கருத்துகளை கேட்ட பின்னரே கவர்னர் நியமனம் நடைபெற வேண்டும் எனவும் அக்குழு வலியுறுத்தியது. அரசியலமைப்பு சட்டம், தேர்தல் ஆணையம் என எதையுமே மதிக்காத இன்றைய ஒன்றிய அரசு, மாநில உரிமைகளை மட்டும் விட்டுத் தரவா போகிறது?. கேட்டால் கிடைக்காது. உரிமைகளை மீட்டெடுக்க வேண்டிய இடத்தில் இன்று மாநிலங்கள் இருக்கின்றன. தமிழகம் இன்று முன்னெடுக்கும் இந்த உரிமை போராட்டத்தில், மற்ற மாநிலங்களும் ஓரணியில் திரள வேண்டிய நேரமிது.