பவர்கிரிட் நிர்வாகத்துக்கு ஆதரவாக இருக்க ரூ. 1.5 லட்சம் லஞ்சம் வாங்கிய உதவி தொழிலாளர் ஆணையர் கைது
புதுச்சேரி: புதுச்சேரி ரெட்டியார்பாளையம், ஜெயா நகர் பகுதியில் ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின், உதவி தொழிலாளர் ஆணையர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு புதுச்சேரி தொண்டமாநத்தம் பகுதியில் இயங்கி வரும் ஒன்றிய அரசின் பவர் கிரிட் கார்ப்பரேஷனில் நிர்வாகத்துக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்துள்ளது.
அப்போது உதவி தொழிலாளர் ஆணையர் ரமேஷ்குமார், பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிர்வாகத்திடம் பணம் பெற்றுக்கொண்டு, நிர்வாகத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சிபிஐக்கு புகார் அனுப்பியுள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த 5 நாட்களாக புதுச்சேரியில் முகாமிட்டிருந்த, சிபிஐ அதிகாரிகள் உதவி தொழிலாளர் ஆணையர் ரமேஷ்குமாரின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று ரூ. 1.5 லட்சம் லஞ்ச பணத்தை பவர் கிரிட் கார்ப்பரேஷன் அதிகாரி ஒருவர், உதவி தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் இருந்த உதவி தொழிலாளர் நல ஆணையர் ரமேஷ்குமாரிடம் கொடுத்துள்ளார்.அப்போது அங்கு மறைந்திருந்த சிபிஐ அதிகாரிகள் அவரையும், லஞ்சம் கொடுத்த பவர் கிரிட் கார்ப்பரேஷன் அதிகாரியையும் சுற்றி வளைத்து கைது செய்தனர்.