கர்நாடகாவில் மீண்டும் முதல்வர் சர்ச்சை; ‘அதிகாரம் நிச்சயம் என்னைத் தேடி வரும்’: கர்நாடக துணை முதல்வர் பேச்சால் பரபரப்பு
பெங்களூரு: ‘அதிகாரம் நிச்சயம் என்னைத் தேடி வரும்’ என கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியுள்ளது, அம்மாநில அரசியலில் மீண்டும் முதல்வர் மாற்றம் குறித்த விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே, முதல்வர் சித்தராமையாவுக்கும், துணை முதல்வர் டி.கே. சிவகுமாருக்கும் இடையே அதிகாரப் பகிர்வு தொடர்பாக மறைமுகப் பனிப்போர் நிலவி வருகிறது. முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் சிவகுமாரும் முதல்வராகப் பதவி வகிப்பார்கள் என ஒப்பந்தம் போடப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், இதை மறுத்த சித்தராமையா, தான் ஐந்து ஆண்டுகளும் முதல்வராக நீடிப்பேன் என கடந்த ஜூலை மாதம் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
காங்கிரஸ் மேலிடம் தலையிட்டு இரு தரப்பையும் சமாதானப்படுத்திய போதிலும், அவ்வப்போது இந்த விவகாரம் பூதாகரமாக வெடிப்பது வழக்கம். இந்நிலையில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், முதல்வர் ஆவது குறித்த கேள்விக்கு பதிலளித்த டி.கே. சிவகுமார், ‘நம்பிக்கை இல்லாமல் வாழ்க்கை இல்லை. அதிகாரம் என்னைத் தேடி வரும்; அதிலிருந்து எதுவும் மாறாது. ஆனால், இன்னும் கடினமாக உழைக்க வேண்டும்; அப்போது நிச்சயம் பலனளிக்கும். அதில் எனக்கு நம்பிக்கை உள்ளது’ என்று சூசகமாகப் பதிலளித்தார். அவரது இந்தப் பேச்சு, முதல்வர் பதவிக்கான தனது விருப்பத்தை அவர் மீண்டும் வெளிப்படுத்தியிருப்பதாகக் கருதப்படுகிறது. இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்தி, காங்கிரஸ் அரசை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
பாஜக தலைவர் ஆர்.அசோகா பேசுகையில், ‘சித்தராமையா அதிகாரத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்; சிவகுமாரும் தனது கோரிக்கையைக் கைவிடமாட்டார். இதனால், வரும் நவம்பர் அல்லது டிசம்பரில் சித்தராமையா தனது பதவியை இழப்பார். அவ்வாறு காங்கிரஸ் அரசு கவிழ்ந்தால், புதிய ஆட்சி அமைக்க உரிமை கோராமல், இடைத்தேர்தலையே விரும்புவோம்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.