ஏழைகளின் வறுமையை பயன்படுத்தி கிட்னி வியாபாரம் செய்யும் கயவர்களுக்கு கடும் தண்டனை: பிரேமலதா வலியுறுத்தல்
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். ஏழை தொழிலாளர்களை குறிவைத்து, புரோக்கர்கள் மூலம் மூளைச்சலவை செய்து, கிட்னி விற்பனை பல ஆண்டுகளாக நடந்துள்ளது. இது பெரும் கண்டனத்துக்கு உரியது.
”வறுமையின் காரணமாக கடனை அடைக்க என் கிட்னியை விற்றேன், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கிட்னி எடுக்கப்பட்டது’’ என்று பாதிக்கப்பட்ட ஒரு நபர் தெரிவித்து இருக்கிறார். ரியல் எஸ்டேட் செய்யும் புரோக்கர்கள் போன்று கிட்னி புரோக்கர்களாக மாறி இருக்கிறார்கள். கிட்னியை விற்று, கிட்னி மோசடி விற்பனையில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் கண்டறிந்து உரிய தண்டனை வழங்க வேண்டும். இதில் ஒரு சில காவல்துறையினரும் ஈடுபட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.
ஏழை மக்களின் வறுமையை பயன்படுத்தி உடல் உறுப்புகளை விற்று வியாபாரம் செய்யும் கயவர்களை கண்டறிந்து, உரிய தண்டனை வழங்கி, இந்த அரசு ஏழை மக்களுக்கு உதவ வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றி இனி வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் நடக்காத வண்ணம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.