கொட்டும் மழையால் குளிர் ரொம்ப ‘ஓவர்’
*கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்
கொடைக்கானல் : கொடைக்கானலில் பெய்யும் மழை காரணமாக குளிர் மேலும் அதிகமாகியதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமடைந்தனர்.மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் நேற்று வார இறுதி நாளையொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
மோயர் பாயிண்ட், பைன் பாரஸ்ட், குணா குகை, தூண் பாறை, பசுமை பள்ளத்தாக்கு, கோக்கர்ஸ் வாக் என அனைத்து இடங்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்து விண் முட்டி நிற்கும் மலை முகடுகள் மற்றும் அதன் மீது தவழ்ந்து சென்ற வெண்பட்டு மேகங்கள் உள்ளிட்ட இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர். நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரி சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் ரெய்டிங் செய்தும் மகிழ்ந்தனர்.
பிரையண்ட் பூங்காவிலும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்து பல வண்ண மலர்களை கண்டு ரசித்ததுடன் செல்பி, புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். கொடைக்கானலில் நேற்று பகல் 1 மணி முதல் 2.30 மணி வரை பரவலாக மழை பெய்தது. இதனால் வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டியது.
இங்கும் சுற்றுலாப் பயணிகள் குவிந்து செல்பி, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். தொடர்மழை காரணமாக கொடைக்கானலில் குளிர் தற்போது அதிகரித்துள்ளது. இந்த சீதோஷ்ண நிலையை சுற்றுலாப் பயணிகள் வெகுவாக அனுபவித்தனர்.