தமிழகத்தின் தவிர்க்க வேண்டிய துயரம் விஜய் ‘அவர் என் முகம் பார்க்க வரலையே’: கரூர் கூட்டத்தில் பலியானவர்கள் கேட்பது போல போஸ்டர்கள்
மதுரை: கரூரில் விஜய் பிரசாரத்தின்போது நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் படங்களுடன், ‘அவர் என் முகம் பார்க்க வரவில்லையே’ என மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் விஜய் பிரசாரத்தின் போது நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுக்க கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மதுரை நகரமெங்கும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், ‘தமிழகத்தின் தவிர்க்க வேண்டிய துயரம் விஜய்’ என்ற தலைப்பின் கீழ் விஜய் பிரசார கூட்டத்து நெரிசலில் பலியானவர்களது படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதற்கு கீழே, ‘யார் முகம் பார்க்க காத்திருந்தேனோ, யாரை முதல்வராக்க உழைத்து, நசுங்கி, மூச்சடைத்து உயிர் துறந்தேனோ, அவரே என் முகம் பார்க்க வரவில்லையே....’ என வாசகம் உள்ளது. மதுரை வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் சார்பில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. விஜய் கூட்ட நெரிசலில் பலியானவர்களே கேள்வி கேட்டு தங்களைக் காண வராத கட்சித் தலைவரிடம் வேதனையை வெளிப்படுத்தும் வகையில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது காண்போரை கலங்க வைத்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போஸ்டர் கிழிப்பு: மதுரையில் கோரிப்பாளையம், பொன்மேனி, தெற்குவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருந்த நிலையில், கிரைம் பிராஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை சிலர் கிழித்தெறிந்தனர்.