தசரா பண்டிகையை முன்னிட்டு ராமர் வேடத்தில் ராகுல் காந்தி போஸ்டர்: உத்தரபிரதேசத்தில் பாஜக - காங்கிரஸ் மோதல்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் ராகுல் காந்தியை ராமனாக சித்தரித்து ஒட்டப்பட்டுள்ள தசரா போஸ்டர், இரு கட்சிகளுக்கும் இடையே புதிய மோதலை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு வெளியே, தசரா பண்டிகையை முன்னிட்டு ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் உருவத்தை ராமர் வேடத்திலும், மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராயின் உருவத்தை லட்சுமணர் வேடத்திலும் இருப்பது போலவும், அவர்கள் ராவணன் மீது அம்பு எய்வது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. அந்த ராவணனின் தலைகளில், ‘வாக்குத் திருடன்’, அமலாக்கத் துறை, ஊழல், விலைவாசி உயர்வு, தேர்தல் ஆணையம் என ஆளும் பாஜக மீதான விமர்சனங்கள் எழுதப்பட்டிருந்தன.
இந்த சுவரொட்டிக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி கூறுகையில், ‘ராமர் இல்லை என்று நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததும், அயோத்தி ராமர் கோயிலுக்குச் செல்லத் தயங்கியதும் இதே காங்கிரஸ்தான். இன்று தங்களை ராமனாகக் காட்டிக்கொள்வது வருத்தமளிக்கிறது’ என்று சாடியுள்ளார். மேலும், ‘காங்கிரஸ் கட்சி இந்து கடவுள்களைத் தொடர்ந்து அவமதித்து வருவதாகவும், இதற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்’ எனவும் துணை முதல்வர் பிரஜேஷ் பதக் வலியுறுத்தியுள்ளார். பாஜகவின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.
இது குறித்துப் பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய், ‘ஊழல், பணவீக்கம் மற்றும் வாக்குத் திருட்டு போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான இளைஞர்களின் உணர்வுகளையே இந்தச் சுவரொட்டி பிரதிபலிக்கிறது. இந்தத் தீமைகளுக்கு எதிராகப் போராடும் ராகுல் காந்தியை அவர்கள் ராமனாகவே பார்க்கிறார்கள்’ என்றார். கடந்த 2023ம் ஆண்டு அக்டோபரில், பிரதமர் மோடியை ராவணனாக சித்தரித்து மத்தியப் பிரதேசத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. தேர்தல் காலங்களில் மதச் சின்னங்களைப் பயன்படுத்தி அரசியல் தாக்குதல்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது.