செங்கோட்டையனுக்கு ஆதரவாகவும், கண்டித்தும் பரபரப்பு போஸ்டர்
செங்கோட்டையனின் கட்சி பதவியை எடப்பாடி பறித்த நிலையில் அவருக்கு ஆதரவாக வேலூரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில், ‘அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற செங்கோட்டையன் கருத்தினை உண்மையான அதிமுக தொண்டர்கள் அனைவரும் வரவேற்கிறோம்’ என்று வேலூர் மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் ரகு என்பவர் பெயரில் ஒட்டப்பட்டுள்ளது.இதேபோல், ராமநாதபுரத்தில் ‘‘தொண்டர்களின் எண்ணங்களை நிறைவேற்ற ஒன்றிணைவோம் வெற்றி பெறுவோம்’’ என செங்கோட்டையனுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் அதிமுக நிர்வாகிகளால் செங்கோட்டையனுக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், ‘‘வயது முதிர்ந்த இலைகள் உதிரத்தான் செய்யும். துளிர்க்க ஆயிரமாயிரம் இளைஞர்கள் காத்திருக்கிறோம். மரங்களைத் தேடித் தான் பறவைகள் வரும், பறவைகள் போவது குறித்து மரங்கள் கவலைப்படுவதில்லை, அதிமுக ஆலமரம் போன்றது. புயல், மழை, வெள்ளம், சூறாவளியை சமாளிக்கக் கூடிய தொண்டர்கள் நாங்கள் இருக்கிறோம்’’ போன்ற வாசகங்கள் அச்சிடப்பட்டிருந்தது. இது டிடிவி.தினகரன், சசிகலா, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் கலக்கத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.