தபால் வாக்கு எண்ணும் நடைமுறையில் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி
புதுடெல்லி: தபால் வாக்குகள் எண்ணுவதில் தேர்தல் ஆணையம் புதிய நடைமுறை மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. தேர்தல்களில் அதிக வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் நோக்கில், மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் தபால் வாக்குகளை எண்ணுவதில் புதிய செயல்முறையை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது. தற்போது வாக்குகள் எண்ணும் நாளில், தபால் வாக்குகள் எண்ணும் நேரம் காலை 8 மணிக்கும், மின்னணு வாக்குகள் எண்ணும் நேரம் காலை 8:30 மணிக்கும் தொடங்குகிறது.
தபால் வாக்குகள் எண்ணிக்கை முடிக்கப்படாவிட்டாலும், மின்னணு வாக்குகள் எண்ணிக்கை தொடரலாம். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்ட பிறகே தபால் வாக்கு முடிவுகள் வெளியாகின்றன. இறுதி முடிவில் தில்லுமுல்லு செய்வதற்காக தபால் வாக்கு முடிவுகள் தாமதப்படுத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
இந்நிலையில் தபால் வாக்குகள் எண்ணுவதில் புதிய நடைமுறையை கொண்டு வர தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதன்படி, மின்னணு இயந்திர வாக்குகள் கடைசி இரண்டு சுற்றுகள் எண்ணுவதற்கு முன்பு தபால் வாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான தபால் வாக்குகள் இருக்கும் சந்தர்ப்பங்களில், தாமதம் ஏற்படாமல் இருக்கவும், எண்ணும் செயல்முறையை மேலும் நெறிப்படுத்தவும் போதுமான எண்ணிக்கையிலான மேசைகள் மற்றும் எண்ணும் ஊழியர்கள் இருப்பதை தேர்தல் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
85 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு வீடுகளுக்கே சென்று வாக்களிப்பு வழங்குவதற்காக தேர்தல் ஆணையம் எடுத்த முயற்சிகளால் தபால் வாக்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் தேர்தல் ஆணையம் இந்த முடிவுக்கு வந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெற உள்ள பீகார் சட்டப்பேரவை தேர்தலில் இந்த புதிய நடைமுறை முதலில் செயல்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.