உலக அஞ்சல் தினத்தையொட்டி அருங்காட்சியகத்தில் தபால் கண்காட்சி
ராமேஸ்வரம்/திருப்புத்தூர் : ராமேஸ்வரம் அருகே பாம்பன் சின்னப்பாலம் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் உலக அஞ்சல் தினம் கொண்டாடப்பட்டது. 1969ம் ஆண்டு ஜப்பானின் டோக்கியோவில் நடந்த உலக அஞ்சல் யூனியன் மாநாட்டில் அக்.9ம் தேதியை முதன் முதலில் உலக அஞ்சல் தினமாக அறிவிக்கப்பட்டது. அன்று முதல் அஞ்சல் சேவைகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் உலகம் முழுவதும் அந்நாளில் உலக அஞ்சல் தினம் கொண்டாடப்படுகிறது. இதன் ஒருபகுதியாக பாம்பன் சின்னப்பாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று உலக அஞ்சல் தினம் கொண்டாடப்பட்டது.
மாணவர்கள் தங்களது பெற்றோரை முதல் பருவத்தேர்வு தரநிலை அறிக்கையில் கையொப்பமிட பள்ளிக்கு வருமாறு அழைத்து மாணவர்கள் கடிதம் எழுதினர். தொடர்ந்து மாணவர்களின் அஞ்சல் அட்டைகள் அஞ்சல் அலுவலகத்தில் சேர்க்கப்பட்டன. கடிதம் எழுதும் பயிற்சியை ஆசிரியர்கள் லியோன், ஞானசெளந்தரி ஆகியோர் வழங்கினர்.
*திருப்புத்தூர் அருகே நகரவயிரவன்பட்டியில் செட்டியார் பாரம்பரிய அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பார்வைக்கு பழமையான தபால் உறைகள், தபால் தலைகள், கடிதங்கள், காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அருங்காட்சியக நிறுவனர் பழனியப்பன் தலைமை வகித்தார். திருப்புத்தூர் வாசகர் வட்டத் தலைவர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
பள்ளி மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு செட்டிநாடு கொட்டான் தபால் தலை, கடிதங்கள், 1947ல் வெளியிடப்பட்ட காந்தி படம் பொறித்த முதல் தபால் தலை முதலியவற்றை ஆர்வமாகக் கேட்டுத் தெரிந்து கொண்டனர். மேலும் அருங்காட்சியக அமைப்பாளர்கள் சார்பாக மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் உலக அஞ்சல் தினம் குறித்து எடுத்துக் கூறப்பட்டது.