அஞ்சலக பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: போலீஸ்காரர் அதிரடி கைது
திருச்சி: திருச்சியில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் போஸ்ட் உமனாக பணியாற்றி வரும் 25வயதான பெண், கடந்த 8ம்தேதி காலை 9மணியளவில் பணி காரணமாக தனது டூ வீலரில் ெபான்மலைக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது, அந்த வழியாக டூ வீலரில் வந்த 32வயதானவர், அந்த இளம்பெண் சென்ற டூ வீலர் முன் குறுக்கே தனது டூ வீலரை நிறுத்தியுள்ளார். தொடர்ந்து, அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டார். இதனையடுத்து அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், பொன்மலை மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில், அஞ்சலக பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள காணக்கிளியநல்லூர் காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் போலீஸ்காரர் கோபாலகிருஷ்ணன்(32) என தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து கோபாலகிருஷ்ணனை நேற்று கைது செய்தனர்.