மூன்றுக்கு மேல் பெற்றால் பதவி காலி அரசு வேலைக்காக குழந்தையை காட்டில் விட்ட பெற்றோர் கைது
சிந்த்வாரா: மத்தியபிரதேசத்தில் பிறந்து 3 நாள்களேயான குழந்தையை காட்டில் விட்டு சென்ற கொடூரம் நடந்துள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தில் அரசு பணியாளர் ஒருவருக்கு, சிவில் சர்வீஸ் விதிகளின்படி, ஜனவரி 26 2001க்கு பிறகு மூன்றாவது குழந்தை பிறந்தால் அவர் அரசு பணிக்கு தகுதி அற்றவராகி விடுவார். இந்நிலையில் சிந்த்வரா மாவட்டத்தை சேர்ந்த தம்பதி பப்லு டான்டோலியா(38), ராஜ்குமார் டான்டோலியா(28). அரசு துவக்க பள்ளியில் பணியாற்றும் இவர்களுக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளன.
இவர்களுக்கு கடந்த மாதம் 24ம் தேதி ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் தங்களுக்கு அரசு வேலை போய் விடுமோ என தம்பதிக்கு பயம் வந்துள்ளது. இதனால், அமர்வாரா தாலுக்காவுக்குள்பட்ட நந்தன்வாடி தஹ்டோரி வனப்பகுதியில் பச்சிளம் குழந்தையை விட்டு சென்றுள்ளனர்.
செப்டம்பர் 28ம் தேதி இரவு பச்சிளம் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே அங்கு விரைந்த காவலர்கள், குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், ஈவு, இரக்கமின்றி குழந்தையை காட்டில் விட்டு சென்ற தம்பதியை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.