பதவி விலகி 100 நாட்களாக மவுனமாக இருக்கும் ஜெகதீப் தன்கர்: காங். விமர்சனம்
புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: இந்திய அரசியல் வரலாற்றில் முன்னோடியில்லாத நிகழ்வு நடந்து சரியாக 100 நாட்கள் ஆகிறது. கடந்த ஜூலை 21ம் தேதி இரவு திடீரென்றும் அதிர்ச்சியூட்டும் விதமாகவும் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் பிரதமர் மோடி புகழ் பாடிய போதிலும், பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது தெளிவாக தெரிந்தது.
முன்பு தினமும் தலைப்பு செய்திகளில் இடம் பெற்ற முன்னாள் துணை ஜனாதிபதி, பதவி விலகி 100 நாட்களாகிவிட்ட நிலையில் முற்றிலும் மவுனமாகி, பார்க்க முடியாத நிலையில் தென்படாமல் உள்ளார். அவர் நிச்சயம் எதிர்க்கட்சிகளின் சிறந்த நண்பராக இருக்கவில்லை. எதிர்க்கட்சிகளை தொடர்ந்து நியாயமற்ற முறையில் நடத்தினார். ஆனாலும், ஜனநாயக மரபுகளின்படி, அவருக்கு முந்தைய அனைத்து தலைவர்களையும் போலவே குறைந்தபட்சம் பிரியாவிடை விழாவாவது அவருக்கு நடத்தியிருக்க வேண்டும். அது நடக்கவில்லை. இவ்வாறு கூறி உள்ளார்.