செயல் தலைவர் பதவியை உருவாக்கி மகளுக்கு அதிகாரம்; பாமகவை பலப்படுத்தும் ராமதாஸ்: இழந்த அங்கீகாரத்தை மீட்க முயற்சி
விழுப்புரம்: தமிழகத்தில் வடமாவட்டங்களில் கனிசமான வாக்கு வங்கியை வைத்துள்ள பாமகவில் கடந்த ஓராண்டாக தந்தை, மகனுக்கிடையே அதிகார மோதல் நீடித்து வருகிறது. மகனின் பதவியை பறித்து கட்சியை விட்டே நீக்கினார். தொடர்ந்து மேடை, பிரஸ் மீட் என அனைத்திலும் அன்புமணி மீது வெளிப்படையாக குற்றச்சாட்டுகளை தெரிவித்துவரும் ராமதாஸ், தனது கட்சியினர் பொதுமக்கள் மத்தியிலும் அன்புமணி பெயரை டேமேஜ் செய்து வருகிறார். ஆனால் கட்சி விதிகளின்படி அன்புமணிதான் பாமக தலைவராக நீடிப்பதாக கூறி அவர்கள் தரப்பு கட்சி கூட்டங்களை நடத்தி வருகிறது. இதனிடையே சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தந்தை- மகன் மோதல் முடிவுக்கு வராது என்ற கருத்தும் பாமக வட்டாரத்தில் நிலவுகிறது.
அன்புமணியை முற்றிலும் ஓரங்கட்டிய நிலையில் சில தினங்களுக்கு முன் தர்மபுரியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஸ்ரீகாந்தியை செயல் தலைவராக நியமித்து, ராமதாஸ் அறிவித்தார். கட்சிக்கும், தனக்கும் ஸ்ரீகாந்தி பாதுகாப்பாக இருப்பார் எனவும் ராமதாஸ் கூறியிருந்தார். இதனால் தனது அரசியல் வாரிசு ஸ்ரீகாந்திதான் என்பதை அவர் முன்மொழிந்துள்ளார். பாமகவில் ஏற்படுத்தப்பட்டுள்ள செயல் தலைவர் பதவி திமுகவில் முன்பே ஏற்படுத்தப்பட்டது. அதே பாணியை பின்தொடர்ந்து தற்போது பாமகவிலும் ராமதாஸ் இப்பதவியை ஏற்படுத்தி மகளுக்கு வழங்கியுள்ளார். ஏற்கனவே செயல் தலைவர் பதவியை அன்புமணி ஏற்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அக்கட்சி நிர்வாகிகள் கூறுகையில், தந்தை, மகன் மோதலுக்கு முக்கிய காரணம் அன்புமணி தலைவர் பதவியை ஏற்ற பிறகு சந்தித்த அனைத்து தேர்தல்களும் படுதோல்வியையும், டெபாசிட் இழக்கும் நிலைக்கும் பாமக சென்றுவிட்டது. தற்போது கட்சி அங்கீகாரத்தையும் இழந்துள்ளது. தேர்தல் நேரத்தில் அவர் எடுக்கும் தவறான கூட்டணி முடிவுதான் இதற்கு காரணம். கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி அழிவதை ராமதாசால் பார்க்க முடியாமல்அவரே தலைவர் பதவியை ஏற்று கட்சியை பழைய நிலைக்கு கொண்டுவர பலப்படுத்தி வருகிறார். தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை, உட்கட்சிகளில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை சரிசெய்யவே மகளை அரசியலுக்கு ராமதாஸ் இறக்கியுள்ளார்.
வரும் தேர்தலில் இழந்த அங்கீகாரத்தை ராமதாஸ் கண்டிப்பாக மீட்பார். அதற்கான தேர்தல் கூட்டணி வியூகங்களை வகுத்து விட்டதாக கூறினர். இதனிடையே செயல் தலைவராக பொறுப்பேற்ற ஸ்ரீகாந்திக்கு சவுமியாவைவிட வரவேற்பு உள்ளதாம். அன்புமணி ஆதரவாளர்களும் ஸ்ரீகாந்தியை சந்தித்து வருகிறார்களாம். அவர்கள் தேர்தலுக்குள் அணி மாறுவார்கள் என்ற நம்பிக்கையில் ஸ்ரீகாந்தி பிரசாரத்தை தொடங்கப்போவதாக பாமக நிர்வாகிகள் கூறுகின்றனர்.
* கட்சி பணியில் செயல் தலைவர்
செயல் தலைவர் பதவி என்பது தலைவர் பதவிக்கு நிகரானது. தலைவர் எல்லா வேலையும் பார்க்க முடியாது என்பதால் செயல் தலைவர் பதவி ஏற்படுத்தப்பட்டது. எனவே தலைவர் பதவியில் உள்ள ராமதாஸ் இனி முக்கிய முடிவுகள் எடுப்பதில் மட்டுமே பங்கேற்பார். மற்றபடி கட்சியின் அனைத்து நடவடிக்கைகளையும் செயல் தலைவரே கவனிப்பார். இதன்மூலம் கட்சியின் அதிகாரம் அனைத்தும் செயல் தலைவர் கட்டுப்பாட்டுக்குள் படிப்படியாக வந்துவிடும் என்கின்றனர்.
* தர்மபுரி மாவட்டத்தில் போட்டியிடும் ஸ்ரீகாந்தி
பாமகவில் தந்தை, மகன் மோதலுக்கு முக்கிய காரணமாக சவுமியாவும் இருந்ததாக ராமதாஸ் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர். கூட்டணி முடிவு உட்பட அனைத்திலும் அவரின் தலையீடு அதிகரித்ததால் சவுமியா மீது ராமதாஸ் கடும் அதிருப்தியில் இருந்துள்ளார். இதனால்தான் தர்மபுரி பொதுக்கூட்டத்தில் தனது மகள் ஸ்ரீகாந்திக்கு செயல் தலைவர் பதவி அறிவிப்பை வெளியிட்டு சவுமியாவுக்கு பதிலடி கொடுத்திருக்கிறாராம் ராமதாஸ். வரும் சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீகாந்தியை தர்மபுரி மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் களமிறக்கவும் ராமதாஸ் முடிவெடுத்திருப்பதாக தைலாபுரம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.