போரூர் - பவர்ஹவுஸ் வரையிலான உயர்மட்ட வழித்தட கட்டுமான முன்வார்ப்பு பணிகள் நிறைவு: மெட்ரோ நிர்வாகம் தகவல்
சென்னை: போரூர் முதல் பவர்ஹவுஸ் வரையிலான உயர்மட்ட வழித்தட கட்டுமானத்திற்கான முன்வார்ப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், இரண்டாம் கட்ட திட்டத்தில் வழித்தடம்-4ல், போரூர் முதல் பவர்ஹவுஸ் வரையிலான உயர்மட்ட வழித்தட கட்டுமானத்தில், வயலாநல்லூர் வார்ப்பு நிலையத்தில் 100 சதவீதம் முன்வார்ப்புப் பணிகள் நிறைவடைந்ததன் மூலம் ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. திட்டத்தின் இந்த பகுதி மிகவும் சிக்கலான பிரிவுகளில் ஒன்றாகும். இங்குள்ள பொறியியல் மற்றும் தளவாட சவால்கள் பலவற்றை இந்த சாதனையின் மூலம் வெற்றிகரமாக கடந்துள்ளோம்.
இந்த மெட்ரோ ரயில் திட்டத்தில், 9 மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கான மேம்பால பாதை அமைக்கும் பணிக்கு தேவையான, பாலத்தின் பாகங்கள், தூண்களின் மேல் பாகங்கள் போன்ற 25 வெவ்வேறு வகையான 3,410 கான்கிரீட் கட்டமைப்புகள் முன்னரே தயாரித்து முடிக்கப்பட்டுள்ளன. இதில், 4 மெட்ரோ ரயில் நிலையங்கள் கொண்ட முக்கியமான 4 கி.மீ. நீளத்தில் அமையவுள்ள இரட்டை அடுக்கு மேம்பாலப் பகுதியும் அடங்கும். இந்த குறிப்பிடத்தக்க சாதனையில் தோராயமாக 1,22,137 கன மீட்டர், கான்கிரீட், 18,470 மெட்ரிக் டன், இரும்பு கம்பி என மொத்தமாக 2,42,455 மெட்ரிக் டன் எடையுள்ள பிரீகாஸ்ட் கட்டுமானப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. இது, இந்த திட்டத்தின் பிரமாண்டத்தையும், துல்லியத்தையும், செயல்பாட்டின் வேகத்தையும் வெளிப்படுத்துகிறது. இப்பணியின் முழு செயல்களும் உரிய பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.