போரூர் - பவர் ஹவுஸ் மெட்ரோ டபுள் டெக்கர் - 95% பணிகள் நிறைவு: அடுத்தாண்டு மத்தியில் போரூர் - பவர் ஹவுஸ் வழித்தடத்தில் போக்குவரத்து தொடங்கும்
சென்னை: போரூர் மற்றும் கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் இடையிலான மெட்ரோ டபுள் டெக்கர் இணைப்பு பணிகள் வரும் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் நிறைவடைந்து விடும் என்றும் அடுத்து ஆண்டு மத்தியில் வழித்தடத்தில் போக்குவரத்து தொடங்கும் என்றும் மெட்ரோ நிறுவனம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை லைட் ஹவுஸிலிருந்து வடபழனி மற்றும் போரூர் வழியாக பூந்தமல்லி வரையிலான 26.1 கி.மீ. 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்தின் 4வது வழித்தடத்தின் ஒரு பகுதியாக போரூர் முதல் பவர் ஹவுஸ் வரையிலான இணைப்பு உள்ளது. போரூர் மற்றும் வடபழனி வழித்தடம் 4 முக்கியமானதாக உள்ளது. ஆழ்வார்திருநகர் மற்றும் ஆலப்பாக்கம் இடையேயான 3.75 கி.மீ. டபுள்டெக்கர் ரயில் பாதை வடபழனி ரயில் நிலையம் மூலம் மற்ற மெட்ரோ வழித்தடங்களுக்கு இணைக்கும் வகையில் அமைக்கப்படுகின்றன. தற்போது போரூர் மற்றும் பவர் ஹவுஸ் இடையே சுமார் 340 தூண்கள் அமைக்க வேண்டியுள்ளதாகவும், அதில் சுமார் 95% பணிகள் நிறைவடைந்து உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இப்பணிகள் முழுமையாக நிறைவடைந்ததும் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள ஆர்காடு சாலையில் பயணிப்பது எளிதாகிவிடும் என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் போரூர், கோடம்பாக்கம், பவர் ஹவுஸ், இடையிலான மெட்ரோ டபுள் டெக்கர் இணைப்பு பணிகள் வரும் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் முழுமையாக நிறைவடைந்துவிடும் என்றும் அடுத்தாண்டு மத்தியில் இவ்வழித்தடத்தில் போக்குவரத்து தொடங்கும் என்றும் மெட்ரோ நிறுவனம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.