இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த ரூ.15,000 கோடி ஒதுக்க வேண்டும் : ஒன்றிய உள்துறை அமைச்சகம் கோரிக்கை
டெல்லி : இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த ரூ.15,000 கோடி ஒதுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம் கோரிக்கை வைத்துள்ளது. வரும் 2027ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி முதல் சாதிவாரி கணக்கெடுப்புடன் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் 2 கட்டங்களாக நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. லடாக், ஜம்மு- காஷ்மீர், ஹிமாச்சல், உத்தரகாண்ட் ஆகிய பனிப்பொழிவு பகுதிகளில் மட்டும் 2026ம் ஆண்டு அக்.1ம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அதற்கான முன்னோட்ட கணக்கெடுப்பு நாடு முழுவதும் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான தலைமை பதிவாளர் மற்றும் ஆணையர் தெரிவித்துள்ளார். இந்த முறை முழுமையாக டிஜிட்டல் முறையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணியில் சுமார் 35 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்காக சுமார் ரூ.14,619 கோடி தேவை என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம், மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள செலவின நிதிக்குழு (EFC) ஒப்புதலுக்காக கோப்புகளை அனுப்பி உள்ளது. இது தொடர்பாக விரைவில் ஒன்றிய அமைச்சரவை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.