பூஞ்ச் அருகே டிரோன்கள் பறந்ததால் பரபரப்பு
ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லை அருகே டிரோன்கள் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம்,மெந்தார் செக்டாரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே நேற்றுமுன்தினம் இரவு டிரோன்கள் பறந்துள்ளன. மிக அதிக உயரத்தில் பறந்த டிரோன்கள் சில நிமிடங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் பகுதிக்கு திரும்பி சென்றுள்ளன. இது குறித்த தகவல் கிடைத்ததும் அந்த பகுதிகளில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், இந்திய பகுதியை கண்காணிக்கும் விதமாக மிக உயரமாக பறக்கும் டிரோன்களை பாகிஸ்தான் பறக்க விட்டுள்ளது. எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே மொத்தம் 6 டிரோன்கள் பறந்தன. பாலகோட், லங்கோட், குர்சாய் நல்லா ஆகிய இடங்களில் இவை தென்பட்டன. டிரோன்களின் மூலம் ஆயுதங்கள் வீசப்பட்டுள்ளனவா என்பதை கண்டறிய பாதுகாப்பு படையினர் எல்லையில் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் என்றனர்.