பைப் வெடிகுண்டு வைத்த வழக்கில் அபுபக்கர் சித்திக்கை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி
பூந்தமல்லி: அத்வானி ரத யாத்திரையில் பைப் வெடிகுண்டு வைத்த வழக்கில் அபுபக்கர் சித்திக்கை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் நடைபெற்ற பல்வேறு வெடிகுண்டு சம்பவங்கள் மற்றும் மத ரீதியான கொலைகளுக்கு திட்டம் தீட்டி தீவிரவாத செயல் புரிந்து 30 ஆண்டு தலைமறைவாக இருந்த நாகூர் அபுபக்கர் சித்திக் மற்றும் திருநெல்வேலி முகமது அலி ஆகியோர் தனிப்படையினரால் ஆந்திர மாநித்தில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். போலீசார் விசாரணையில், வேலூர் பாஜ நிர்வாகியும் மருத்துவருமான அரவிந்த் ரெட்டி கொலை வழக்கு மற்றும் அத்வானி ரத யாத்திரையின்போது பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அபுபக்கர் சித்திக்கிற்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில், அத்வானி ரத யாத்திரையின்போது பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் 30 ஆண்டுக்கு பிறகு கைது செய்யப்பட்ட அபுபக்கர் சித்திக்கை தீவிரவாத தடுப்புப்பிரிவு போலீசார், போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளித்தனர். அந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி மலர்விழி, இந்த வழக்கில் அபுபக்கர் சித்திக்கை 6 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். மேலும் வரும் 28ம்தேதி அவரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தீவிரவாத தடுப்புப்பிரிவு போலீசார், அபுபக்கர் சித்திக்கை ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்க பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். ஏற்கனவே, வேலூர் பாஜ பிரமுகரும் மருத்துவருமான அரவிந்த் ரெட்டி கொலை வழக்கில் அபுபக்கர் சித்திக்கை போலீசார் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்தது குறிப்பிடத்தக்கது.