பூந்தமல்லி புறவழிச்சாலை - போரூர்சந்திப்பு வரை மெட்ரோ ரயில்கள், வழித்தடங்களுக்கு பாதுகாப்பு சான்றிதழ்கள் பெறுவதற்கான சோதனைகள் தொடங்கியது!
சென்னை: சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 4-ல் பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர்சந்திப்பு மெட்ரோ நிலையம் வரை மெட்ரோ இரயில்கள் மற்றும் வழித்தடங்களுக்கு பாதுகாப்பு சான்றிதழ்கள் பெறுவதற்கான சோதனைகள் தொடங்கியது.
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 4-ல் பூந்தமல்லி புறவழிச்சாலை முதல்போரூர் சந்திப்பு வரையிலான வழித்தடத்தில் பயணிகள் சேவை தொடங்குவதற்கு முன்னதாக, பாதுகாப்பு சான்றிதழ் பெறுவதற்கான சோதனைகளைத் தொடங்கியுள்ளது. இந்தச் சோதனைகள், இரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய இரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு (RDSO - Research Designs and Standards Organisation) மூலம் நடத்தப்படுகின்றன. மெட்ரோஇரயில் பெட்டிகளுக்கான சான்றிதழைப் பெறுவதற்குப் பின்பற்றப்படும் நடைமுறைகளின் படி இந்தச் சோதனைகள் நடைபெறுகின்றன. இந்த நடைமுறையின் படி, இந்திய அரசாங்கத்தின் இரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் RDSO அமைப்பானது தொழில்நுட்ப ஒப்புதல் மற்றும் பாதுகாப்பு சான்றிதழ் வழங்குகிறது.
ஆகஸ்ட் 16, 2025 முதல் இந்த சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன, மேலும் அவை சுமார் இரண்டு வாரங்களுக்குத் தொடரும். இக்காலகட்டத்தில், மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்பட்டு பயணிகளின் பயண வசதி மதிப்பீடு செய்யப்படுகிறது. அத்துடன், வழித்தடத்தில் இரயில்களின் இழுவை மற்றும் பிரேக்கிங் செயல்திறன் (verification of traction and braking performance) பற்றியவிரிவான சரிபார்ப்பும் செய்யப்படுகிறது. இந்த சோதனைகள் வெற்றிகரமாக முடிந்தால், புதிய வழித்தடம் மற்றும் மெட்ரோ இரயில்கள் பாதுகாப்பு தரங்களுக்கு இணங்குவதை உறுதி செய்யும், மேலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுவதற்கு முன்பு பயணிகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக், முன்னிலையில் பாதுகாப்புச் சான்றிதழ் சோதனைகள் நடைபெற்றன. இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர்கள் தி. அர்ச்சுனன் (திட்டங்கள்), எஸ்.கிருஷ்ண மூர்த்தி(நிதி), மனோஜ் கோயல், (அமைப்புகள் மற்றும் இயக்கம்), தலைமைப் பொது மேலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன், (மெட்ரோ இரயில், சமிக்ஞை மற்றும் தொலைத் தொடர்பு), சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் பொது ஆலோசகர் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக்,கூறியதாவது: "இரண்டாம் கட்ட திட்டத்தின் முன்னேற்றத்தில், பாதுகாப்பு சான்றிதழ் சோதனைகள் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதைக் குறிக்கிறது. பூந்தமல்லி புறவழிச்சாலையில் இருந்து போரூர் சந்திப்பு வரையிலான இந்த வழித்தட பகுதி 1ஏ (viaduct Section 1A), 9 நிமிடங்களில் மணிக்கு 90 கி.மீ.வேகத்தில் இந்த சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. பாதுகாப்பு மற்றும் நம்பகத் தன்மையின் மிக உயர்ந்ததரங்களை பூர்த்தி செய்வதற்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். நிலையான முன்னேற்றத்துடன், பொதுமக்களின் நலனுக்காக இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்துவதை நோக்கமாக கொண்டு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்." என்று கூறினார்.