அந்நியர் ஆதிக்க எதிர்ப்பின் பெருமைமிகு தமிழ் அடையாளம் பூலித்தேவர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!!
சென்னை: மாமன்னர் பூலித்தேவனின் 310வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி அவரது வீரத்தையும், தியாகத்தையும் நினைவுகூர்ந்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவில் கூறியதாவது;
அந்நியர் ஆதிக்க எதிர்ப்பின் பெருமைமிகு தமிழ் அடையாளமான பூலித்தேவர் அவர்களின் பிறந்தநாள்!
சிப்பாய்ப் புரட்சிக்கும் நூறாண்டுகளுக்கு முன்பே தமிழ்நிலத்தில் புரட்சி வெடித்துவிட்டது! தென்னகம் அந்நியருக்குப் பட்டா போட்டு தரப்படவில்லை எனப் பறைசாற்றும் விதமாகப் போரிட்டு, இந்திய விடுதலைப் போராட்டத்துக்கான தொடக்கவுரை எழுதிய பூலித்தேவரின் புகழ் போற்றுகிறேன்!. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு;
பாரதத் தாயின் வீர மகன் பூலித்தேவரின் பிறந்தநாளில், தேசம் அவருக்கு உளமாற மரியாதை செலுத்துகிறது. தொலைநோக்குப் பார்வைமிக்க தலைவர், சாதுர்யமான உத்திவகுப்பாளர் மற்றும் அச்சமற்ற போர்வீரரான அவர் கொடுங்கோல் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக உறுதிபட நின்று, பாரத விடுதலைக்கான ஆரம்பகால மற்றும் மிகவும் வலிமையான போராட்டங்களில் ஒன்றை வழிநடத்தினார்.
அவரது லட்சியங்கள், தியாகங்கள் மற்றும் மரபுகள், விடுதலை போராட்டத்துக்கு வலுவான அடித்தளமிட்ட இடைவிடாத போராட்டத்தில் மக்களை ஒன்றிணைத்தன. அவை நீடித்த வலிமையின் மூலாதாரமாகத் தொடர்ந்து வலுவான, மீள்தன்மை மற்றும் வளமான வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கான நமது தேசிய உறுதிப்பாட்டை ஊக்குவிக்கின்றன. இவ்வாறு தெரிவித்துள்ளார்.