பொங்கல் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து
அன்புமணி (பாமக தலைவர்): தைத் திருநாள் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வளர்ச்சியைக் கொடுக்க வேண்டும். அதற்காக உழைக்க இந்த தைத்திருநாளில் தமிழர்களாகிய நாம் அனைவரும் இயற்கையின் முன் உறுதியேற்றுக் கொள்வோம். திருமாவளவன்(விசிக தலைவர்): தமிழ்ச் சமூகத்தினரால் மட்டுமே பூரிப்புப் பொங்க கொண்டாடப்படும் பெருநாள் என்றாலும், இது விவசாயப்பெருங்குடி மக்களின் விளைச்சல் திருநாளே ஆகும். அதாவது, வேளாண் தொழிலைப் போற்றும் திருவிழாவாகும். ஜி.கே.வாசன்(தமாகா தலைவர்): தை மாதம் பிறந்து தமிழர்கள், விவசாயிகள் வாழ்வில் கடந்த காலத்தில் ஏற்பட்ட துன்பங்கள், துயரங்கள், இழப்புகள், பாதிப்புகள் எல்லாம் மறைந்து புத்தொளி பிறந்து நல்வழி பிறக்கட்டும்.
கே.பாலகிருஷ்ணன்(சிபிஎம் மாநில செயலாளர்): பொங்கல் திருநாள் உழைப்பின் உன்னதத்தை உயர்த்தி பிடிக்கிற சிறப்புமிக்க பண்டிகை. இந்த நன்னாளில் மக்கள் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்திட அனைவரும் உறுதியேற்போம். பொன்குமார்(தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சி தலைவர்): தமிழ்ப் புத்தாண்டும் தமிழர் திருநாளாம் பொங்கலும் புது நம்பிக்கையோடு பிறக்கிறது. எல்லாருடைய வாழ்க்கையிலும் இன்பம் பொங்கிடட்டும். பிரசிடெண்ட் அபூபக்கர்(இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர்): உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம். உலகம் முழுக்க வாழும் அனைத்து தமிழர்கள் வாழ்விலும் இன்பமும், மகிழ்ச்சியும் பொங்கட்டும்.