ஆளுக்கொரு பொண்டாட்டி இலவசம் என பேச்சு அதிமுக எம்பியை கண்டித்து மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்: ஆளுக்கொரு பொண்டாட்டி இலவசம் என பேசிய அதிமுக எம்பியை கண்டித்து, மாதர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். விழுப்புரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அக்கட்சி முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்பி, தேர்தல் நெருங்குது... பல அறிவிப்புகள் வரும். மிக்சி, கிரைண்டர், ஆடு, மாடு என்ற இலவச திட்டத்தோடு ஆளுக்கொரு பொண்டாட்டியை கூட இலவசமாக கொடுப்பார்கள் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
அரசின் இலவச திட்டங்களோடு, பெண்களை இழிவுபடுத்தி பேசிய சி.வி.சண்முகம் எம்பியை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நேற்று விழுப்புரம் நகராட்சி திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாநில துணைசெயலாளர் மேரி கூறுகையில், ‘சி.வி.சண்முகம் பெண்களை இழிவாக பேசியதை கண்டிக்கிறோம். முதலமைச்சர் பெண்களுக்கு பல இலவச திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியிருக்கிறார்.
இதனால் பெண்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது. இந்த இலவச திட்டங்களோடு, தேர்தல் காலங்களில் பொண்டாட்டியை இலவசமாக கொடுப்பதாக சி.வி.சண்முகம் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. பெண்கள் என்ன போதை பொருளா, இலவச பொருளா. பெண்களை துச்சப்படுத்தி ஆணாதிக்கம் என்ற சமுதாயத்தை காட்டியிருக்கிறார். எனவே, சி.வி.சண்முகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து சி.வி.சண்முகத்திற்கு எதிராக பெண்கள் கோஷமிட்டனர்.