பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் மண் மேடாகி கிடக்கும் ராசிங்கப்பேரி குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும்
சிவகிரி : பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் சுமார் 10 அடி உயரத்திற்கு மண் மேடாகி உள்ள ராசிங்கப்பேரி குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது ராசிங்கப்பேரி குளம்.
இந்த குளம் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு ஜமீன் காலத்தில் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ராசிங்கப்பேரி குளம் சிவகிரி வட்டத்திலுள்ள பெரியகுளம் ஆகும். இக்குளத்தின் மூலம் சுமார் 787 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இக்குளத்தில் இருந்துதான் 32 குளங்களுக்கு தண்ணீர் செல்ல வேண்டும். ராசிங்கப்பேரி குளம் பெருகி அதன்பின் கலிங்கில் வழியாக தொட்டிச்சி மலை ஆறு மூலமாக தண்ணீர் சிவகிரி பகுதியில் உள்ள மற்ற குளங்களுக்கு சென்று அக்குளங்கள் பெருகி அப்பகுதியிலுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பலன் பெற்று வருகின்றன. ராசிங்கப்பேரி கண்மாயில் உள்ள வடக்கு மடை மூலமாக சுமார் 1500 ஏக்கர் நிலங்களும், தெற்கு மடை மூலமாக சுமார் 500 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகிறது.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பொதுப்பணித்துறை மூலம் கண்மாய்களின் மடைகளை சீர் செய்து, கரைகளின் உயரத்தை கூட்டுவதற்காகவும், பலப்படுத்துவதற்காகவும் குளத்தில் இருந்து மண்ணை அள்ளி கரையில் போட்டு கரையை பலப்படுத்தினார்கள். ஆனால் குளத்தை ஆழப்படுத்தவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
ராசிங்கப்பேரி கண்மாய் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் சுமார் 10 அடி உயரத்திற்கு மண் குளத்தில் படிந்து குளம் மேடாகி உள்ளது. இதனால் குளத்தில் தண்ணீரை சேமிக்க முடியவில்லை. மேலும் மண் நிறைந்து காணப்படுவதால் மடைகள் வழியாக தண்ணீர் சீராக கொண்டு செல்வதில் பிரச்னை உள்ளது.
இதன் காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே, ராசிங்கப்பேரி குளத்தை வடக்கிலிருந்து தெற்கு முகமாக ஆழப்படுத்தி மராமத்து பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.