பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த காலஅவகாசம் நீட்டிப்பு: அபராதமின்றி கட்டலாம்
சென்னை: பாலிடெக்னிக் மாணவர்கள் அபராத கட்டணமின்றி தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி ஆணையர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். பாலிடெக்னிக் கல்லூரிகளில் 3 ஆண்டு பொறியியல் டிப்ளமோ படிக்கும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் நவம்பர் மாதம் நடைபெற உள்ளன. ‘இந்த தேர்வுக்கு கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி செப்.16 (நேற்று). அபராத கட்டணம் ரூ.150 செலுத்தி செப்.17 (இன்று) முதல் 23ம் தேதி வரையும், அபராத கட்டணம் ரூ.750 செலுத்தி செப்.24 முதல் 26ம் தேதி வரையும் விண்ணப்பிக்கலாம்’ என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இதில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவரும், தொழில்நுட்பக் கல்வி ஆணையருமான இன்னசென்ட் திவ்யா வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: நவம்பர் மாதம் நடைபெற உள்ள பாலிடெக்னிக் தேர்வுக்கு எந்தவிதமான அபராத கட்டணமும் செலுத்தாமல் செப்.20ம் தேதி வரையும், ரூ.150 அபராத கட்டணம் செலுத்தி செப்.21 முதல் 27ம் தேதி வரையும், அபராத கட்டணம் ரூ.750 செலுத்தி செப்.28 முதல் அக்.6ம் தேதி வரையும் விண்ணப்பிக்கலாம். முதல் செமஸ்டர் தவிர மற்ற அனைத்து செமஸ்டர் மாணவர்களுக்கும் கடைசி வேலை நாள் அக்.3 என்பதற்கு பதிலாக, அக்.17 என மாற்றப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கல்வி இயக்கக இணையதளத்தில் செமஸ்டர் தேர்வுக்கான உத்தேச கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு தொடங்குவதற்கு 15 நாட்களுக்கு முன்பு விரிவான அட்டவணை வெளியிடப்படும்.