சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்!
ஈரோடு: ஈரோடு மொடக்குறிச்சியில் ரூ.4.9 கோடியில் அமைக்கப்பட்ட பொல்லான் சிலையுடன் கூடிய நினைவு மண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தீரன் சின்னமலையின் படைத்தளபதியும் சுதந்திர போராட்ட வீரருமான மாவீரன் பொல்லானின் சிலையை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள நல்லமங்காபாளையம் கிராமத்தில் பிறந்த பொல்லான், சிறுவயதிலிருந்து வாள், வில், மற்போரில் சிறந்த முறையில் பயிற்சிகள் பெற்றார். தீரன் சின்னமலை,வெள்ளையர் படையை எதிர்த்து 1801 இல் நடைபெற்ற பவானிப்போர், 1802இல் நடைபெற்ற ஓடாநிலைப் போர். 1,803 இல் நடைபெற்ற அரச்சலூர் போர் ஆகிய மூன்று போர்களிலும் பெற்ற வெற்றிகளுக்கு மூலகாரணமாகத் திகழ்ந்தவர் மாவீரன் பொல்லான்.
அதனால், சினம் கொண்ட ஆங்கிலேயப் படைத்தளபதி கர்னல் ஹாரிஸ் வீரர்களால், ஓடாநிலை கோட்டைக்கு அருகில் ஜெயராமபுரத்தில் மாவீரன் பொல்லான் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மாவீரன் பொல்லான் அவர்களது வீரத்தை போற்றும் வகையில் ஜெயராமபுரத்தில் முழு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டித்தருமாறு, பொல்லான் வீர வரலாறு மீட்புக் குழு பல ஆண்டுகளாக விடுத்த கோரிக்கையை ஏற்று, திராவிட மாடல் அரசு 4.90 கோடி ரூபாய் மதிப்பில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஜெயராமபுரத்தில் அமைத்துள்ள அவரது முழு உருவச்சிலையுடன் கூடிய அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.