பொள்ளாச்சி சந்தையில் மாடுகள் விற்பனை தொடர்ந்து மந்தம்
*வர்த்தகம் பாதிப்பு
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை மாட்டு சந்தை கூடுகிறது. இதற்காக வெளி மாவட்டம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
கடந்த மாதம் துவக்கத்திலிருந்து கல்நடைகள் வரத்து அதிகமாக இருந்ததுடன் அந்நேரத்தில், கேரள வியாபாரிகள் வருகையும் அதிகரிப்பால் மாடுகளின் விற்பனை விறுவிறுப்புடன் இருந்தது. ஆனால் கடந்த 3 வாரத்துக்கு மேலாக ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் குறைவானது.
அதிலும் மைசூரில் தசரா திருவிழா என்பதால் ஆந்திர மாநில பகுதியிலிருந்து மாடுகள் வரத்து மிகவும் குறைவானது. நேற்று கூடிய சந்தைக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து சுமார் 800க்கும் குறைவான மாடுகளே விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. ஆனால் புரட்டாசி மாதத்தையொட்டி கேரள வியாபரிகள் வருகை மிகவும் குறைந்து விற்பனையும் மந்தமானது.
இதனால் கடந்த வாரத்தை விட குறைவான விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. கடந்த இரண்டு வாரமாக ரூ.1.40 கோடி முதல் ரூ.1.60 கோடி வரை வர்த்தகம் இருந்தது. ஆனால் நேற்று விற்பனை மிகவும் மந்தமாகி, ரூ.1 கோடிக்கு வர்த்தகம் இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.