சென்னை: தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கை: ஒவ்வொரு மேடையிலும் நமது தமிழரின் வரலாற்றுப் பெருமைகளை உரக்க கூறி உலகை வியக்க வைக்கும் பிரதமர், தொடர்ந்து நமது தமிழ் பாரம்பரியப் பொருட்களை உலகரங்கில் அடையாளப்படுத்தி வருகிறார். தமிழ் மொழி மீதும், தமிழர் பண்பாடு, கலாச்சாரம் மீதும், தமிழ் மன்னர்கள் மீதும் அளவற்ற நேசம் கொண்ட ஒரு பிரதமர் இந்திய வரலாற்றிலேயே மோடி ஒருவர்தான் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? தமிழகத்தில் 2 நாள் நிகழ்ச்சியை முடித்துவிட்டு டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ள பிரதமர், ஓயாத கடல் அலை போன்றவர். இத்தனை சுறுசுறுப்புடன் செயல்பட முடியுமா என இளைஞர் பட்டாளம் வியந்து பார்க்கும் ஒப்பற்ற தலைவர். இப்படிப்பட்ட ஒரு மாமனிதரோடு இரண்டு நாட்களைக் கழித்தது என் வாழ்வின் மறக்க முடியாத தருணம். இன்னும் எத்தனை காலங்கள் கழித்து நினைத்துப் பார்த்தாலும் மெய்சிலிர்க்கும் அனுபவம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.