தைலாபுரத்தில்தான் பாமக தலைமை அலுவலகம்; வேறு எங்கும் கிளைகள் இல்லை; அன்புமணி தலைவர் என்று கூறினால் நடவடிக்கை பாயும்: ராமதாஸ் பரபரப்பு பேட்டி
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் நேற்று காலை பாமக நிறுவனர், தலைவர் ராமதாஸ் அளித்த பேட்டி:
பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக 30.5.2025ல் நான் பொறுப்பேற்று பல்வேறு நிகழ்வுகளை செய்து வருகிறேன். செயற்குழு, நிர்வாக குழு கூட்டம் ஏற்கனவே கூட்டப்பட்டுள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 10ம் தேதி பூம்புகாரில் மகளிர் மாநாடு நடைபெறுகிறது. பாமகவின் தலைமை அலுவலகம் தைலாபுரம் இல்லத்தில் மட்டும் தான் செயல்படுகிறது. சென்னை உள்ளிட்ட வேறெங்கும் கிளைகள் இல்லை. நிர்வாகிகள் யாரும் சென்னையிலோ, வேறு எங்கும் வைத்திருந்தால் அது சட்டத்திற்கு புறம்பானது.
கவுரவ தலைவராக ஜி.கே.மணி, செயல் தலைவராக அன்புமணி, பொதுச்செயலாளராக முரளி சங்கர், பொருளாளராக சையத் மன்சூர் உசேன் ஆகியோர் பதவியேற்று செயல்பட்டு வருகின்றனர். இதுதொடர்பான ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, அதிகார பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளின் பணியை யார் தடுத்தாலும், அது கட்சியின் சட்ட விதிகளுக்கு புறம்பானது. மீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்படுவார்கள். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும், சூதும் வாதும் வேதனை செய்யும். பாமகவின் கட்சி கொடியை வேறு யாரும் பயன்படுத்த கூடாது. அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக் கூடாது என கூறியிருந்தேன். என்னுடைய இனிசியலை மட்டும் வேண்டுமானால் போட்டுக்கொள்ளலாம்.
வருகின்ற 25ம் தேதி அன்புமணி நடைபயணம் மேற்கொள்ளப் போவதாக கூறப்படுகிறது. இதில் எனது பெயரையோ, கட்சி கொடியையோ பயன்படுத்த கூடாது என திட்டவட்டமாக சொல்லிக் கொள்கிறேன். அன்புமணியின் நடைபயணத்தை தடை செய்ய வேண்டுமென டிஜிபியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறை அதற்கு தடை விதிக்க வேண்டும். நடைபயணம் மேற்கொண்டால் வட தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் நடைபயணத்தை காவல் துறை தடை செய்ய வேண்டும்.
பாமகவின் செயல் தலைவராக அன்புமணி போடப்பட்ட நிலையில், உரிமை மீட்பு நடைபயணத்திற்கு என்னிடம் அனுமதி வாங்க வேண்டும். ஆனால் அவர் வாங்கவில்லை. அன்புமணி கட்சி கொடியை பயன்படுத்தினால் காவல் துறை நடவடிக்கை எடுக்கும். சிறப்பு பொதுக் குழுவின்படி பாமகவின் செயல் தலைவராக அன்புமணி தொடர்வார். தன்னை தலைவர் எனக்கூறி கொண்டால் நடவடிக்கை பாயும். என்னை பற்றியும், என்னுடன் இருப்பவர்களை பற்றியும் சிலர் தவறாக பதிவிடுகிறார்கள், சிலர் அதனை ஊக்கப்படுத்துகிறார்கள். அவர்கள் அதனை நிறுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
வாழ்நாளில் சந்திக்காத அசிங்கம்; ஒட்டு கேட்பு கருவி வைத்தது யார்..?
ராமதாஸ் கூறுகையில், ‘தமிழகத்தில் எந்த தலைவருக்கும் நடக்காத ஒன்று எனக்கு நடந்துள்ளது. இதுவரை என் வாழ்நாளில் நான் சந்திக்காத அசிங்கம் நடந்துள்ளது. நான் உட்காரும் இருக்கைக்கு அருகில் ஒட்டுக் கேட்பு கருவி வைத்திருக்கிறார்கள். அதனை நாங்கள் கண்டுபிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளோம். இந்த கருவி இங்கிலாந்திலும், பெங்களூரிலும் கிடைக்கும். ஒட்டுக் கேட்பு கருவி வைத்தது யார், எதற்கு வைத்தார்கள் என்பது எனக்குத் தெரியும். யார் என்றும் தெரியும். விசாரணை பாதிக்கப்படும் என்பதால் அது குறித்து இப்போது கூற முடியவில்லை. அடுத்த வார வியாழக்கிழமை இது தொடர்பாக தெரிவிக்கப்படும்’ என்றார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு வரவேற்பு
ராமதாஸ் அளித்த பேட்டியில், அரியலூரில் ரூ.19.25 கோடி செலவில் சோழகங்கம் ஏரி சீரமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் 1,370 ஏக்கர் விவசாயம் பாசன வசதி பெறும் என்பதால் விரைந்து முடிக்க வேண்டும். பிரதமர் மோடி வருகின்ற 27ம் தேதி தமிழகம் வருகையின் போது சோழர்களின் வாரிசுகளை பெருமைபடுத்த வேண்டும். பாழடைந்து வரும் உடையார்பாளையம் அணையை அரசு சீரமைக்க வேண்டும். கங்கை கொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திரனுக்கு சிலை வைக்க வேண்டும். தமிழக முதல்வர் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைய என் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன் என்றார்.