நகராட்சி பணியிடங்கள் ஒளிவுமறைவற்ற முறையில் நியமனம் அரசுக்கு களங்கம் கற்பிக்கும் முயற்சி எக்காலத்திலும் வெற்றி பெறாது: அமலாக்கத்துறைக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலடி
சென்னை: நகராட்சி பணியிடங்கள் ஒளிவுமறைவற்ற முறையில் நியமனம் செய்யப்பட்டது. அரசுக்கு களங்கம் கற்பிக்கும் முயற்சி எக்காலத்திலும் வெற்றி பெறாது என்று அமலாக்கத்துறைக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்துள்ளார். தமிழக நகராட்சி நிர்வாக துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாக காவல்துறை டிஜிபி விசாரணை நடத்த வேண்டும் என்று அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டுமென்ற அரசியல் உள்நோக்கத்தோடு, பல ஆண்டு காலத்திற்கு முந்தைய வங்கி வழக்கு ஒன்றினை தூசு தட்டி எடுத்து, அதனை ஊதிப் பெரிதாக்கும் முயற்சியில் தோற்றுப்போன ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை மேற்கொண்டுள்ள மேலும் ஒரு முயற்சி தான், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் பணி நியமனம் குறித்த நேற்றைய கடிதம்.
2019 பணியிடங்களை நேரடி நியமனம் மூலமாக நிரப்ப வேண்டும் என்பதற்காக, அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக கடந்த 2.2.2024 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து, பிற பணியிடங்களையும் சேர்த்து 2,569 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன. அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக, 591 மையங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டன. நியாயமான முறையில் தேர்வுகள் நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதால், இந்த தேர்வில் கலந்துகொண்ட லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஒரு ஆட்சேபனை கூட பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதி தேர்வு முடிவுகள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டு, மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையிலும், கலந்தாய்வு முறையிலும், இறுதியாக 2,538 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நேரடி நியமனம் தொடர்பாக பல்வேறு வழக்குகளும், தடையாணைகளும் நிலுவையில் இருந்த நிலையில், கடந்த 4.7.2025 அன்று, அனைத்து தடைகளும் உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட நிலையில், இறுதி தேர்வு பட்டியலும் வெளியிடப்பட்டது. இவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணியாணைகள் முதல்வரால் வழங்கப்படடன.
இத்தகைய ஒரு வரலாற்று சாதனை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையால் நிகழ்த்தப்பட்டதை பொறுத்துக் கொள்ள முடியாமல், இதற்கு களங்கம் கற்பிக்கும் வகையில், அமலாக்கத்துறை மூலமாக ஒன்றிய அரசு இத்தகைய அரசியல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இரண்டு லட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்து, ஒரு லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதி, ஒளிவுமறைவற்ற முறையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, இறுதியாக 2,538 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு, சிறப்பாக பணிபுரிந்து வரும் நிலையில், இவ்வாறு களங்கம் கற்பிக்கும் முயற்சி எக்காலத்திலும் வெற்றி பெறாது.
அரசியல் நோக்கத்தோடு மேற்கொள்ளப்படும் இதுபோன்ற நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதோடு, அவற்றை முறியடிக்க தேவையான அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மேற்கொள்ளும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். கடந்த 2024ம் ஆண்டு நடந்த தேர்வுகளில் மட்டும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அலுவலர்கள் தலையிட்டதால் தவறுகள் நிகழ்ந்துள்ளன என்ற கூற்று நகைப்புக்குரியது.