என் கட்சிக்கு என்ன பெயர்னு 20ம் தேதி சொல்றேன்: மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா பேட்டி
சென்னை: புதிய கட்சி தொடங்குவது தொடர்பாக மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நவம்பர் 20ம் தேதி சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் பேரவையில் நாங்கள் தொடங்க இருப்பது இயக்கமா, சங்கமா அல்லது கட்சியா என்பதை அறிவிக்க உள்ளோம். அரசியல் இயக்கம்தான் தொடங்க உள்ளோம். அரசியல் இயக்கத்தின் பெயர் எனக்கு தெரியாது. எங்கள் அரசியல் திசைவழியை தீர்மானிக்க அமைக்கப்பட்ட குழுவினருக்கு மட்டுமே தெரியும். அவர்கள் 20ம் தேதி அறிவிக்க உள்ளார்கள்.
ஜனநாயக மாண்பு இல்லாமல் கார்ப்பரேட் அரசியல் வாதியாக துரை வைகோ இருக்கிறார். மகனுக்காக என்னை துரோகி என்று வைகோ அழைத்தார். அன்புமணியை அரசியலுக்கு அழைத்து வந்ததற்கு ராமதாஸ் வருத்தப்பட்டது போன்று துரை வைகோவை அரசியலுக்கு அழைத்து வந்ததற்கு வைகோவும் வருத்தப்படுவார். 2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நல கூட்டணி உருவானதற்கு பல ரகசியங்கள் இருக்கிறது அதை தற்போது சொல்ல இயலாது. கூட்டணி விவகாரத்தில் சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுக்கும் தலைவராக இருந்தவர் வைகோ என்பதை மறுப்பதற்கில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
* நச்சுப்பாம்பு மல்லை சத்யா- வைகோ ஆவேசம்
துரை வைகோ சொத்து குறித்தும் வைகோவின் நடைபயணத்தையும் விமர்சித்து மல்லை சத்யா குற்றம்சாட்டியிருந்தார். மதுரையில் நடந்த நிகழ்ச்சிகளை முடித்த பிறகு மல்லை சத்யாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், ‘‘இது ஜமுக்காளத்தில் வடிகட்டிய அப்பட்டமான, அபாண்டமாக பொய். என் நேர்மை உலகறிந்தது. ஆலகால விஷத்தை கக்கும் நச்சுப்பாம்பு போல அவர் பேசி இருக்கிறார். என் எதிரிகள் கூட இந்த குற்றச்சாட்டை சொன்னதில்லை. என்னுடைய அரசியல் பயணத்தை எல்லா அரசியல் கட்சித்தலைவர்களும் அறிவார்கள்’’ என்றார்.