தீப்பெட்டி, கடலை மிட்டாய் தொழிலுக்கு தேவையான உதவி லைட்டரை தடை செய்ய அதிமுக முயற்சி எடுக்கும்: எடப்பாடி பழனிசாமி பேச்சு
தொடர்ந்து அவர், கோவில்பட்டி காந்தி மைதானம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், கடலை மிட்டாய் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் அங்கு வைத்திருந்த தீப்பெட்டி, கடலை மிட்டாய் கண்காட்சியை பார்வையிட்டார். இதையடுத்து நடைபெற்ற கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘சிறு,குறு தொழில் மூலம் தான் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தீப்பெட்டிக்கு 18% ஜிஎஸ்டியை 12 சதவீதமாக வரி குறைப்பு செய்தது, தீக்குச்சி இறக்குமதிக்கு 5% வரி நீக்கம் செய்தது அதிமுகதான். ஒன்றிய அரசு பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்ய அதிமுக முயற்சி எடுக்கும்.
கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் பிரச்னைகள் குறித்து கூறினார்கள். போலியை தடுக்க கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் இணைந்து பாக்கெட்டுகளில் உங்களது சங்கத்தின் சீல் வைத்தால் நன்றாக இருக்கும். தீப்பெட்டி, கடலை மிட்டாய் தொழிலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அதிமுக செய்யும்’ என்றார். பின்னர் தூத்துக்குடி ஐக்கிய கிறிஸ்துவ அமைப்பு நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, விஜயபாஸ்கர், உதயகுமார், தளவாய் சுந்தரம், கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் கார்த்தீஸ்வரன் மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.