கவின் குடும்பத்துக்கு செல்வப்பெருந்தகை ஆறுதல்
ஏரல்: தூத்துக்குடி மாவட்டம், ஏரல், ஆறுமுகமங்கலத்தில் உள்ள, ஆணவக்கொலை செய்யப்பட்ட ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ் வீட்டுக்கு நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை, நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். உடன், எம்பி ராபர்ட் புரூஸ், எம்எல்ஏக்கள் ஊர்வசி அமிர்தராஜ், ரூபி மனோகரன் மற்றும் நிர்வாகிகள் சென்றனர். இதைத்தொடர்ந்து செல்வபெருந்தகை கூறுகையில் ‘‘கவின் செல்வகணேஷ் படுகொலை வன்மையாக கண்டிக்கதக்கது.
மீண்டும் ஒரு முறை தமிழ்நாட்டில் இதுபோன்ற ஆணவ படுகொலை நடக்காமல் காவல்துறை பார்த்து கொள்ள வேண்டும். கல்வியில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று கோல்ட் மெடல் வாங்கிய ஒரு இளைஞனை படுகொலை செய்துள்ளனர். மனிதாபிமானம் உள்ளவர்கள், மனசாட்சி உள்ளவர்கள், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் யாரும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
எனவேதான் ஆணவ படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்’’ என்றார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், தமிழக காங். கமிட்டி பொறுப்பாளருமான கிரிஸ் ஜோடங்கரும் செல்போனில் கவினின் தந்தை சந்திரசேகருக்கு ஆறுதல் கூறினார்.