பாஜவின் அரசியல் நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள் கீழடி ஆராய்ச்சியை மறைத்து சோழர் பெருமை பேசுவதா? விஜய் கடும் தாக்கு
மாபெரும் யானைப் படை, கடற்படையைக் கட்டமைத்திருந்த வீறு மிகுந்த சோழப் பேரரசால் அமைக்கப்பட்டு, இன்றளவும் தமிழ் மண்ணுக்கும் தமிழகத்திற்கும் தனிப்பெரும் அடையாளமாக இருக்கும் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு தமிழையும் தமிழ்நாட்டையும் ஓரவஞ்சனையுடன் ஒதுக்கும் ஒன்றிய பாஜ அரசின் பிரதமர் மோடி வந்து, ராஜராஜ சோழனுக்கும் ராஜேந்திர சோழனுக்கும் சிலைகள் அமைக்கப்படும் என்று அறிவித்ததோடு சோழர்களின் பெருமை குறித்து நமக்குப் பாடம் எடுப்பது போல பேசிச் சென்றுள்ளார்.
கீழடியில் கிடைத்த அசைக்க முடியாத ஆதாரங்களை மறைத்து, தமிழர் நாகரிகத்தையும் வரலாற்றையும் மூடி மறைக்க முயலும் ஒன்றிய பாஜ அரசு, இப்போது இங்கு வந்து சோழர்களின் பெருமை பற்றிப் பேசி உள்ளது, முழுக்க முழுக்க கபட நாடகமன்றி வேறென்ன? தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் எதிராக உள்ள ஒன்றிய பாஜ அரசு நடத்தும் அரசியல் ஆதாய நாடகத்தை இனியும் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள். மறைமுகமான கபட நாடக அரசியலுக்கான தக்க பதிலடியை 2026 தேர்தலில் தமிழக மக்கள் உறுதியாக தருவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.